இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் இருபதாம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாக களமிறங்கினார். அவருக்கு அனுபவ வீரர் புஜாரா அறிமுக தொப்பியைக் கொடுத்து வாழ்த்தினார்.
தொடர்ந்து வர்ணையாளராக பேசிய அவர் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனுக்கு ஸ்பெஷல் பரிசு ஒன்றைக் கொடுத்தார். அதாவது மைக்கேல் வாகன் எப்போதும் இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் பேசுவதும் தோல்வியை சந்திப்பார்கள் என்று சொல்வதும் வழக்கமாகும். அந்த வகையில் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 4 – 0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்திக்கும் என்று அவர் ட்விட்டரில் கணித்திருந்தார்.
2021இல் செய்த கிண்டல்:
அதற்கேற்றார் போல் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்தது. போதாக்குறைக்கு விராட் கோலி தம்முடைய குழந்தை பிறப்பு காரணமாக நாடு திரும்பினார். அதனால் தம்முடைய கணிப்பு கண்டிப்பாக உறுதியாகும் என்று மீண்டும் மைக்கேல் வாகன் ட்விட்டரில் கிண்டலடித்திருந்தார்.
அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற ரகானே 2வது போட்டியில் சதத்தை அடித்து ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். 3வது போட்டியை புஜாரா, விஹாரி, அஸ்வின் ஆகியோர் உடம்பில் அடி வாங்கியே டிரா செய்ய உதவினார்கள். கடைசிப் போட்டியில் காபாவுக்கு வந்து மோதிப் பாருங்கள் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் ஃபைன் இந்தியாவின் அஸ்வினிடம் சவால் விடுத்திருந்தார்.
புஜாராவின் பதிலடி பரிசு:
கடைசியில் அந்த மைதானத்தில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற இளைஞர்களை வைத்து 32 வருடம் கழித்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா காபா கோட்டையை உடைத்து மூவர்ணக் கொடியை பறக்க விட்டது. மேலும் 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்தியா மைக்கேல் வாகன் உள்ளிட்டவர்களுக்கு பதிலடி கொடுத்தது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த தொடர்களை (2018/19, 2020/21) வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது.
இதையும் படிங்க: இதே வலையில் விராட் கோலியா இருந்தா மண்ணை கவ்விருப்பாரு.. ஜெய்ஸ்வால் – ராகுலை பாராட்டிய மஞ்ரேக்கர்
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு 4 – 0 என்ற கணக்கில் இந்தியா இந்தியா தோற்கும் என்று மைக்கேல் வாகன் பதிவிட்டிருந்த ட்வீட்டை புஜாரா புகைப்படமாக எடுத்து ஃபிரேம் செய்துள்ளார். அந்த ஃபிரேமில் ஆட்டோஃகிராப் போட்டு கொடுக்குமாறு மைக்கேல் வாகனிடம் கொடுத்த புஜாரா கரியைப் பூசினார் என்றே சொல்லலாம். அதை கசப்பான சிரிப்புடன் வாங்கிய மைக்கேல் வாகன் ஆட்டோஃகிராப் போட்டு கொடுத்தார். அதை அருகிலிருந்த சுனில் கவாஸ்கரும் பார்த்து புன்னகைத்தது வைரலாகி வருகிறது.



