ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாட உள்ள பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றி பெற இந்தியா தயாராகி வருகிறது.
இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால் சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமான அவர் இதுவரை தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்த அவர் சில சாதனைகளை படைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
பிரைன் லாரா அட்வைஸ்:
இருப்பினும் ஆஸ்திரேலியாவில் மைதானங்கள் வேகத்துக்கு சாதகமாகவும் பெரிதாகவும் இருக்கும் என்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் தெரிவித்திருந்தார். எனவே ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடப் போகும் ஜெய்ஸ்வால் தனது பேட்டிங் டெக்னிக்கில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய தவறினால் சிக்ஸர்கள் கேட்ச்சாக மாறலாம் என்று ஹைடன் கூறியிருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கு மனவலிமை மட்டுமே அவசியம் என்று ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் அசத்தும் திறமையை ஜெய்ஸ்வால் கொண்டுள்ளார் என்று நினைக்கிறேன். அதை ஜெய்ஸ்வால் கரீபியன் மண்ணில் அறிமுகமான போது பார்த்துள்ளேன். கண்டிப்பாக ஆஸ்திரேலியாவில் ஆடுகளங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்”
மனவலிமை முக்கியம்:
“ஆனால் உங்களுடைய பலத்தை எடுத்து விளையாடினால் உங்களால் எந்த சூழ்நிலையிலும் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும். எனவே ஆஸ்திரேலியாவிலும் அவர் அசத்துவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். அட்ஜஸ்ட்மென்ட் என்பது வேறு. எந்த வகையான சூழ்நிலையிலும் உங்களுடைய திறமைக்கு ஆதரவு கொடுப்பதே அட்ஜஸ்ட்மென்ட் ஆகும். நீங்கள் ஒரே மாதிரியாகவும் உணரலாம்”
இதையும் படிங்க: 556 ரன்ஸ்.. பாகிஸ்தான் அபாரம்.. சூர்யகுமார் போல மாஸ் காட்ட நினைத்த இங்கிலாந்து வீரர்.. கடைசியில் ட்விஸ்ட்
“தற்போது இந்தியாவில் சூழ்நிலைகள் மாறியுள்ளது. நீங்கள் சர்வதேச வீரர்களுடன் அங்கே போட்டி மிகுந்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறீர்கள். எனவே டெக்னிக்கல் அளவில் பெரிய மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது மனதளவில் செய்யும் மாற்றங்களை பொறுத்தது. ஏனெனில் வீட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும். ஆஸ்திரேலியா வித்தியாசமான மிருகம் போன்ற இடம். இருப்பினும் ஆஸ்திரேலிய மண்ணில் வெல்லும் திறமை இந்த இந்திய அணியில் இருப்பதை கடந்த தொடர்களில் பார்த்தேன்” என்று கூறினார்.



