இந்திய கிரிக்கெட் அணி தற்சமயத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு அணிகளுக்கு நிகராக செயல்பட்டு வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. ஐசிசி டி20 மற்றும் ஒருநாள் தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது.
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையிலும் இந்தியா டாப் 5 இடங்களில் இருக்கிறது. அத்துடன் உலக கிரிக்கெட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழும் வகையில் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்துள்ளனர். அதை விட பொருளாதார அடிப்படையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டுகளைக் காட்டிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக திகழ்கிறது.
கிரிக்கெட்டின் கிங் இந்தியா:
ஒரு காலத்தில் இந்திய வீரர்களுக்கு சம்பளத்தை வழங்குவவே பிசிசிஐ திண்டாடியது. சொல்லப்போனால் ஒருமுறை பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கச்சேரி நடத்தி அதில் கிடைத்த நன்கொடை பணத்தை இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக கொடுத்தது. அந்தளவுக்கு ஏழ்மையில் இருந்த பிசிசிஐ 2008ஆம் ஆண்டு ஐபிஎல் எனும் டி20 தொடரை துவங்கியது.
அப்போதிலிருந்து இந்திய அணிக்கு பல தரமான வீரர்கள் கிடைத்து வருகின்றனர். அத்துடன் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் பிசிசிஐ கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது. அதனால் உலகிலேயே மிகவும் பணக்கார வாரியமாக இந்தியா மாறியது என்றால் மிகையாகாது. இந்நிலையில் இந்தியா தான் கிரிக்கெட்டின் கிங் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் பிரட் லீ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பிரெட் லீ கருத்து:
இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புவதே அதற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நீங்கள் கிரிக்கெட்டை எவ்வளவு விளம்பரப்படுத்தினாலும் உங்களுக்கு வெளிநாடுகளில் இருப்பது போல ரசிகர்கள் பட்டாளம் கிடைக்காது. இந்தியாவில் 1.5 பில்லியன் மக்களில் கிரிக்கெட்டை விரும்பாத 10 பேரை சந்தித்தேன்”
இதையும் படிங்க: 7க்கு 0.. அன்று இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான்.. இன்று உலகக் கோப்பையில் ஜீரோவாகி வீட்டுக்கு போன சோகம்
“அந்தளவுக்கு அங்கே மக்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். அங்குள்ள பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் பந்தை கையிலெடுக்குமாறு சொல்கின்றனர். அவர்கள் விஷயங்கள் வேகமாக நடைபெறுவதை விரும்புகின்றனர். அதனாலேயே டி20 சுவாரசியமாக வேலை செய்கிறது. பிரேசிலில் கால்பந்து பெரியது என்று மக்கள் சொல்வார்கள். இல்லை, இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ஆதரவைப் போல் நான் எங்கேயும் பார்த்ததில்லை. அவர்கள் தான் கிரிக்கெட்டை நடத்துகிறார்கள்” என்று கூறினார்.



