வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா அதிரடியாக வென்றது. அதனால் சவால் விட்ட வங்கதேசத்தை மீண்டும் அடித்து நொறுக்கிய இந்தியா ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்றது. அந்த வெற்றிக்கு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
முதுகில் செய்த அறுவை சிகிச்சையால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய பாண்டியா 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். முன்னதாக 2022 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மா ஓய்வெடுத்த டி20 தொடர்களில் இந்தியாவையும் வழி நடத்தினார்.
பறிப்போன கேப்டன்ஷிப்:
அதனால் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஃபிட்டாக இல்லை என்று சொல்லி கழற்றி விட்டார். அத்துடன் சூரியகுமார் யாதவை புதிய டி20 கேப்டனாக கௌதம் கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார். அதனால் ஏமாற்றத்தை சந்தித்த பாண்டியா ஒரு சாதாரண வீரராக தொடர்ந்து இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில் தம்முடைய கேப்டன்ஷிப்பை பறித்தவர் என்ற வகையில் சூரியகுமார் மீது ஹர்திக் பாண்டியா எந்த வெறுப்பையும் காட்டாமல் முழு மனதுடன் கேப்டனாக ஏற்றுக்கொண்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாக் பாராட்டியுள்ளார். மேலும் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர்கள் தான் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை டாமினேட் செய்யும் அணியாக மாற்றியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
ஏற்றுக்கொண்ட பாண்டியா:
இது பற்றி பிராட் ஹாக் பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா இந்த இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவை ஏற்றுக்கொண்ட விதத்தை நான் விரும்புகிறேன். சூரியகுமார் தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக்கும் அவர் உதவியுள்ளார். பேட்டிங்கில் தற்போது அவர் தன்னுடைய உண்மையான ஃபார்மையும் காண்பித்துள்ளார்”
இதையும் படிங்க: 259 ரன்ஸ்.. பிறந்தநாளில் பாபர் அசாமுக்கு இடியை இறக்கிய இளம் பாகிஸ்தான் வீரர்.. 42 வருட அபார சாதனை
“ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் கொஞ்சம் சுமாராக விளையாடினார். அது குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்காக வந்த அழுத்ததால் ஏற்பட்டது என்று நமக்குத் தெரியும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நீங்கள் டாமினேட் செய்யக்கூடிய அணியாக இருக்க வேண்டுமெனில் மிக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் தேவை. அதைத்தான் பாண்டியா எடுத்து வருகிறார். பந்து வீச்சில் அவர் மற்ற பவுலர்களை விட கொஞ்சம் ரன்கள் வழங்கினாலும் பேட்டிங்கில் உங்களுக்கு ஆழத்தைக் கொடுக்கிறார்” என்று கூறினார்.



