
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் செமி ஃபைனல் மார்ச் நான்காம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதில் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. துபாயில் இதுவரை விளையாடிய 3 குரூப் சுற்றுப் போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற இந்தியா நல்ல ஃபார்மில் இருக்கிறது. எனவே ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்து இந்தியா ஃபைனலுக்கு செல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை சொந்த மண்ணில் சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் தோற்கடித்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே போல இம்முறையும் துபாய் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால் ஆஸ்திரேலியாவை தாண்டி இந்தியா வெல்லுமா என்ற கேள்வியும் காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியை ஃபைனலுக்கு ஆஸ்திரேலியா செல்ல விடாது என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இந்திய அணி மீது அதிகப்படியான அழுத்தம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதனால் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த பின் ஏற்பட்ட சோகமான ரியாக்சன் இம்முறையும் இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு உண்டாகலாம் என்று ஹாடின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்தியா தங்களது அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடி தனித்துவமான நிலையில் இருக்கிறது. துபாய் பிட்ச் காய்ந்திருக்கும் நிலையில் ஸ்கொயர் பகுதிகளில் புற்கள் இல்லை. அது இந்தியாவுக்கு பொருந்தும். ஆனாலும் அவர்கள் மீது அனைத்து அழுத்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா தங்களுக்குத் தாங்களே பெருமையுடன் விளையாடி செமி ஃபைனலுக்கு வந்துள்ளார்கள்”
“இது அவர்களுக்கு மற்றும் ஒரு சாதாரணப் போட்டி. எனவே ஆஸ்திரேலியர்கள் மீது எந்த அழுத்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்தியா அழுத்தத்தை தங்களது சொந்த வழியில் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை தோற்கடித்தால் அது அப்செட்டாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த சூழ்நிலைகளில் இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடிப்பதை நான் பார்ப்பேன்”
இதையும் படிங்க: அவர்கிட்ட பேசிட்டேன்.. வருணை சமாளித்து 2023 உ.கோ மாதிரி இந்தியாவை வீழ்த்த தயார்.. ஸ்மித் நம்பிக்கை
“உண்மையில் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் இந்தியா மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கிறது. ஏனெனில் அவர் வந்ததிலிருந்து கடந்த 6 மாதங்களில் அவர்கள் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. எனவே இத்தொடரில் எப்படியாவது ஃபைனல் செல்ல வேண்டும் என்று அழுத்தம் அவர்கள் மீது இருக்கிறது. ஆனால் அவர்கள் ஃபைனல் செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. தோல்வியை சந்தித்த பின் அவர்களிடம் பெரிய ரியாக்சன் இருக்கலாம்” என்று கூறினார்.