இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர ஜாம்பவான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடருடன் ஓய்வு பெற்றார். 2010இல் அறிமுகமாகி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு நிகராக அதிக தொடர்நாயகன் விருதுகளையும் வென்று அவர் உலக சாதனை படைத்துள்ளார்.
இருப்பினும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்தது. அதனால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் 38 வயதில் ஓய்வு பெற்றார். இந்நிலையில் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே அஸ்வின் ஓய்வு பெற்றது சிரிப்பை ஏற்படுத்தக்கூடிய வேடிக்கையான விஷயம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாடின் தெரிவித்துள்ளார்.
வேடிக்கையான ஓய்வு:
மேலும் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்தும் இந்திய அணி வாய்ப்பு கொடுக்காதது அஸ்வின் ஓய்வு பெற காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் முதல் 3 போட்டிகளில் சுந்தர், அஸ்வின், ஜடேஜா என 3 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சரியான ஐடியா இல்லாமல் விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஹாடின் பேசியது பின்வருமாறு.
“முதல் மூன்று போட்டிகளில் இந்தியா 3 வெவ்வேறு ஸ்பின்னர்களை விளையாடியது. அதிலிருந்து இங்கே என்ன ஸ்டைலில் விளையாட வேண்டும் என்பது தெரியாமல் இந்தியா இங்கே வந்தார்கள் என்பது தெளிவாகிறது. ஆஸ்திரேலியாவில் போதுமான அளவுக்கு விளையாடியும் அவர்கள் இவ்வாறு செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. மறுபுறம் அஸ்வின் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற்றது வேடிக்கையான ஒன்றாகும்”
இந்திய அணியே காரணம்:
“அதற்கான உண்மையான காரணம் இன்னும் நாம் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படாத கருப்பு குதிரையாக இருந்தார் என்று நினைக்கிறேன். அஸ்வின் தன்னைத்தானே இந்திய அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னராக பார்க்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய சாதனைகளும் அந்த அளவுக்கு உயர்தரமாக இருக்கிறது”
இதையும் படிங்க: திரும்பி அங்க போய்ட்டு வாங்க.. எல்லாம் சரியாகிடும்.. விராட் ரோஹித்துக்கு அட்வைஸ் கொடுத்த – ரவி சாஸ்திரி
“அதன் காரணமாக “நான் உங்களுடைய சிறந்த ஸ்பின்னர் என்று நீங்கள் முடிவு எடுக்கவில்லையெனில் பெஞ்சில் அமர்வதற்கு விரும்பவில்லை. நான் போதுமான அளவுக்கு விளையாட்டு விட்டேன். எனவே இது எனக்கு தேவையில்லை” என்ற வகையில் இந்திய அணிக்கு மறைமுகமான பதிலடி கொடுத்து அஸ்வின் ஓய்வு பெற்றார் என்று நினைக்கிறேன். இன்னும் அவருடைய ஓய்வுக்கான தெளிவான காரணம் நமக்கு தெரியவில்லை” என்று கூறினார்.



