ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலிய தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா வென்று சாதனை படைத்தது. எனவே இம்முறையும் போராடி ஆஸ்திரேலியாவில் வெல்வதற்கு இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியாது என முன்னாள் வீரர் ப்ராட் ஹடின் தெரிவித்துள்ளார்.
தாங்க முடியாது:
ஏனெனில் இயற்கையாகவே ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான வேகம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அங்கே கமின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்களால் நிற்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஜெய்ஸ்வால் சிறந்த வீரர் என்பது எனக்கு தெரியும். ஆனால் இதற்கு முன் அவர் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததில்லை. எனவே அவர் இங்குள்ள பவுன்ஸை சரியாக எதிர்கொள்வார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. பெர்த் மைதானத்தில் ஓப்பனிங் செய்வது மிகவும் கடினமான வேலை”
ரிஷப் பண்ட் அசத்துவார்:
“அதே சமயம் ரிஷப் பண்ட், அலெக்ஸ் கேரி ஆகியோர் தங்களுடைய அணிகளுக்கு முக்கிய சாவிகளாக இருப்பார்கள். ஏதேனும் தருணத்தில் இந்த தொடரில் டாப் ஆர்டர் தகர்க்கப்படும். இரண்டு அணிகளின் வேகப்பந்து வீச்சும் நன்றாக இருக்கிறது. அதனால் இரு அணிகளின் பவுலர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களை தகர்ப்பார்கள்”
இதையும் படிங்க: அபிஷேக் சர்மா ஓகே.. ருதுராஜ் கெய்க்வாட் நாட் ஓகே வா? இது என்ன மேட்டர்னு புரியல – ரசிகர்கள் ஆதங்கம்
“எனவே அலெக்ஸ் கேரி ஏழாவது இடத்திலும் ரிஷப் பண்ட் ஆறாவது இடத்திலும் தங்களுடைய அணிகளுக்கு முக்கிய வேலையை செய்வார்கள் என்று நம்புகிறேன். அந்த இருவருமே அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். இந்த தொடர் முழுவதும் ஓரிரு வழியில் வேகமாக செல்லும்” என்று கூறினார். இருப்பினும் கடந்த இரண்டு தொடர்களில் இதே ஆஸ்திரேலியா பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள். அதே போல இம்முறையும் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார்கள் என்று நம்பலாம்.