
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சில் தடுமாற்றம் அடைந்த இந்திய அணியானது முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கே ஆல் அவுட்டாகியுள்ளது. மைதானமானது வேகப் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைத்ததால் இந்திய அணியின் பவுலர்களும் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை விரைவிலேயே விக்கெட் எடுத்து விடுவார்கள் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் பொறுப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியானது 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் மிக முக்கிய பவுலர் ஒருவர் புதிய பந்தில் சரியாக பந்து வீசவில்லை என்று தனது கருத்தை கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின் பௌலரான ப்ராட் ஹாக். இந்தியாவின் மிக முக்கிய வேகப் பந்து வீச்சாளராக திகழும் ஜாஸ்பிரித் பும்ரா, இதுவரை இந்த போட்டியில் 11 ஓவர்கள் வீசி 34 ரன்களை விட்டுக் கொடுத்து உள்ளார்.
மேலும் அவர் ஒரு விக்கெட்கூட வீழ்த்தாதது ஆச்சர்யமாக இருக்கிறது. அவரைப் பற்றிய பேசியுள்ள ப்ராட் ஹாக் கூறியதாவது, இந்திய அணியில் இஷாந்த் சர்மா மற்றும் முஹம்மது ஷமி ஆகியோர் புதிய பந்தில் மிக நன்றாக பந்து வீசினர். அவர்களின் லைன் மற்றும் லெந்த்தும் நன்றாக இருந்தது. ஆனால் மற்றொரு வீரரான ஜாஸ்பிரித் பும்ரா நன்றாக பந்து வீசவில்லை. என்னைப் பொறுத்தவரை புதிய பந்தில் அவரால் சிறப்பாக பந்து வீச இயலாது. இந்த போட்டியிலும் சிறிது நேரம் சென்ற பின்னர்தான் அவர் கொஞ்சம் நன்றாக பந்து வீசினார் என்று ப்ராட் ஹாக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களைப் போல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிந்தித்து செயல்பட வில்லையென்றும் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்,
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதற்காக, முழு லெந்தில் பந்துகளை வீசினார்கள். ஆனால் இந்திய அணியின் வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்துவதற்கான லெந்த்தில் மட்டுமே பந்துகளை வீசினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களை பற்றி யோசிக்காமல் முழு லெந்த் பந்துகளை வீசினால் மட்டுமே விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும்.
இதை இந்திய அணியின் வீரர்கள் செய்யத் தவறியிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். மைதானத்தின் தன்மையை நன்றாக உணர்ந்திருந்த நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், ஒரு ஸ்பின் பவுலர் கூட இல்லாமல் ஐந்து வேகப் பந்து வீச்சாளர்கள் கொண்ட அணியை இந்த போட்டிக்காக தேர்வு செய்தார்.
அவர் நினைத்ததை போலவே அதி அற்புதமாக செயல்பட்டனர் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள். அந்த அணியில் இடம் பிடித்த வேகப் பந்து வீச்சாளர்களில் டி கிரான்ட்ஹோம் தவிர மற்ற அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சில் இஷாந்த சர்மா மட்டுமே ஒரு விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.