இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே, இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தனது அலட்சியமான ஆட்டத்தினால் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து உள்ள இந்திய அணியின் இளம் வீரர் ஒருவருக்கு, தனது அறிவுரையை வழங்கியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின் பௌலரான ப்ராட் ஹாக். இந்த இறுதிப் போட்டி முடிந்ததும் அடுத்து வரும் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அந்த இளம் வீரர் தனது பேட்டிங் செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ப்ராட் ஹாக் கூறியுள்ளார்.

இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரின் எதிர்பார்ப்பும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட்டின் மீது தான் இருந்தது. கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களாக அபாரமாக ஆடி வரும் அவர், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும் அற்புதமாக விளையாடுவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், அலட்சியமான பேட்டிங்கினால் தனது விக்கெட்டை எளிதில் பரிகொடுத்து வெளியேறினார். மேலும் ஸ்விங் ஆகும் பந்துகளில் அதிகமான தடுமாற்றம் அடைந்த அவர், கைல் ஜேமிசன் வீசிய அதே போன்ற ஒரு பந்தில் தான் தனது விக்கெட்டையும் பறிகொடுத்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பன்ட்டின் இந்த தடுமாற்றமான ஆட்டத்தை கண்ட ப்ராட் ஹாக் கூறியதாவது, ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என்று நினைக்கும் ரிஷப் பன்ட், அதற்காக தனது புட் ஒர்க்கை அதிகமாக பயனபடுத்த தவறி விடுகிறார். இதுதான் அவருக்கு இங்கிலாந்தில் சிக்கலானதாக இருக்கிறது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை காட்டிலும் அதிகமாக ஸ்விங் செய்யக் கூடிய ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் பந்து வீச்சை எதிர் வரும் தொடரில் சந்திக்க இருக்கும் இதுபோன்ற சமயத்தில், அவர் தனது பேட்டிங்கை சரிபடுத்திக் கொள்ள வேண்டும்.

இங்கிலாந்து தொடருக்கு இரண்டு வாரத்திற்கும் மேல் நேரம் இருப்பதால் ரிஷப் பன்ட் அதனைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்விங் ஆகும் பந்துகளில் எப்படி விளையாட வேண்டும் என்று தெரிந்து கொள்வார். இதனை நான் நம்புகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

கடந்த 18 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த போட்டியில் நான்கு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் முதல் இன்னிங்ஸே முடிவு பெறாமல் இருக்கிறது. இரண்டு நாட்களின் ஆட்டம் மழையின் காரணமாக மொத்தமாக கைவிடப்பட்டுள்ளது. ரிசர்வ்டே உடன் சேர்த்து இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளதால் இந்தப் போட்டியானது ட்ராவில் தான் முடியும் என அனைவரும் கருத்து கூறி வருகின்றனர்.



