சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்திய அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பொதுவாக இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் பேட்ஸ்மேன்களுக்கு அதிக ஆதரவை கொடுத்து அவர்களை தங்களது ஹீரோவாக கொண்டாடுவது வழக்கமாகும். குறிப்பாக 80களில் அசத்திய சுனில் கவாஸ்கர் 10000 டெஸ்ட் ரன்கள் அடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்தார்
அதன் பின் 90களில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் தனி ஒருவனாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், 100 சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் போன்ற பல்வேறு உலக சாதனைகளையும் சச்சின் படைத்தார். அதைத் தொடர்ந்து எம்.எஸ். தோனி மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அசத்தினார்.
பும்ரா கருத்து:
அவர்களைத் தொடர்ந்து தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள். அதனால் இந்திய ரசிகர்கள் எப்போதுமே பேட்ஸ்மேன்களை அதிகமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் எப்போதும் பவுலர்களை விட பேட்ஸ்மேன்கள் தான் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள் என்று ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார்.
இருப்பினும் உண்மையில் பவுலர்கள் தான் கிரிக்கெட்டை நடத்துவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் நோபால் போட்டால் ஃபிரீ ஹீட் என்ற பவுலர்களுக்கு பாதகமான விதிமுறையை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் பும்ரா பேசியது பின்வருமாறு. “நான் பந்து வீச்சாளர்களுக்கான வக்கீல்”
“நமது நாடு பெரிய பேட்ஸ்மேன்களை விரும்பும் என்பதை நான் நியாயமாக புரிந்து கொள்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்த வரை பவுலர்கள் தான் விளையாட்டை நடத்துகின்றனர். நான் டெஸ்ட் போட்டிகள் தொலைக்காட்சியில் அதிகமாக காண்பிக்கப்பட்ட தலைமுறையில் இருந்து வந்தவன். எனவே என்னை பொறுத்த வரை இப்போதும் டெஸ்ட் போட்டிகள் தான் மகத்தான ஃபார்மட்”
இதையும் படிங்க: 239 ரன்ஸ்.. டெயில் எண்டர்களால் மாறிய போட்டி.. வெ.இ அணியை அடித்து விளாசும் தெ.ஆ
“ஏனெனில் ஒருவேளை நான் டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினால் அது ஒருநாள், டி20 போன்ற மற்ற வகையான கிரிக்கெட்டையும் பார்த்துக் கொள்ளும் என்று கருதுகிறேன். அதே சமயம் நோ-பால் போட்டால் ஃபிரீ ஹிட் என்ற நடைமுறை அகற்றப்பட வேண்டும்” என்று கூறினார். இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வெல்ல பும்ரா முக்கிய பங்காற்றினார். அதனால் தற்போது அவரை விராட், ரோஹித் ஆகியோருக்கு நிகராக ரசிகர்கள் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.



