இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது ஜூலை 13ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக அங்கு சென்றுள்ளதால் இளம் வீரர்களை கொண்ட ஒரு புதிய அணி தற்போது இலங்கை சென்றுள்ளது.
இந்த புதிய அணியின் கேப்டனாக தவானும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் செயல்பட இருப்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரின் வீரர்கள் வீரர்கள் தேர்வு நடைபெறும் முன்னர் இந்த புதிய இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ஷிகர் தவான் மற்றும் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அனுபவத்தின் அடிப்படையில் பல ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வரும் தவான் இந்த தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் துணை கேப்டனாக பாண்டியா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்றொரு மூத்த வீரரான புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இப்படி இவர்கள் இருவரும் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் இந்த தேர்வு குறித்து சற்று சலசலப்பு இருந்தது.
இருப்பினும் தற்போது இந்த புதிய அணி எவ்வாறு விளையாட போகிறது என்ற எதிர்பார்ப்பு காரணமாக அந்த விவாதங்கள் அப்போதே முடிந்தன. இந்நிலையில் கொழும்பு சென்றுள்ள இந்திய அணி அங்கு உள்ள மைதானத்தில் இந்த 6 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த தொடரில் துணை கேப்டனாக செயல்பட இருக்கும் புவனேஷ்வர் குமார் தனது புதிய பதவி குறித்து பேசுகையில் கூறியதாவது : நான் துணை கேப்டனாக செயல்பட இருப்பது வெறும் பேப்பருக்கு மட்டும்தான், இதனால் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடாது.
இருப்பினும் ஒரு மூத்த வீரராக இருந்து அணியில் உள்ள அனைத்து இளம் வீரர்களுக்கும் நல்ல திறன்களையும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவிகளை செய்வேன். அதுமட்டுமின்றி துணைக் கேப்டனாக இருப்பது ஒரு மரியாதைக்குரிய பொறுப்பு அதனை நான் சரியாக செய்து இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை சிறப்பாக செயல்பட வைப்பேன் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் துணை கேப்டன் பதவியை விரும்பவில்லையா ? என்ற ரீதியில் தற்போது விவாதங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.