IND vs WI : முதிர்ச்சியுடன் அறிமுகமாகியுள்ளார் – துல்லியத்துக்கு பெயர்போன புவியின் பாராட்டுக்களை அள்ளும் இளம் இந்திய வீரர்

Bhuvaneshwar-Kumar
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 190 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசை அற்புதமாக பந்துவீசி மடக்கிப் பிடித்த இந்திய பவுலர்கள் 122 ரன்களுக்கு சுருட்டி பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இந்திய அணியில் பந்துவீச்சில் அனைவருமே சிறப்பாக செயல்பட்ட நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது 2-வது போட்டியில் விளையாடினாலும் ஏற்கனவே உலகத்தரமான அனுபவத்தை பெற்றதுபோல் அற்புதமாக பந்து வீசியது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்திருந்ததால் இவரின் திறமையை அறிந்த பஞ்சாப் நிர்வாகம் உடனடியாக தங்களது அணியில் குறைந்த விலைக்கு வாங்கிப் போட்டது. அதனால் 2018இல் ஐபிஎல் கேரியரை தொடங்கிய அவர் 2020 வரை முறையே 10.90, 8.77, 8.27 என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடையும் வகையில் சிறப்பான எக்கனாமியில் பந்துவீச தொடங்கினார்.

- Advertisement -

விவேகமும் முதிர்ச்சியும்:
குறிப்பாக 2021 சீசனில் சிறப்பாக பந்துவீசி 18 விக்கெட்டுகள் எடுத்த காரணத்தால் இந்த வருடம் 4 கோடி என்ற பெரிய தொகைக்கு பஞ்சாப் நிர்வாகம் தக்க வைத்த நிலையில் முதல் முறையாக முழுமையான 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 10 விக்கெட்களை 7.70 என்ற மேலும் துல்லியமான எக்கனாமியில் அட்டகாசமாக பந்து வீசினார். அதிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட நினைக்கும் கடைசி கட்ட ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா, ராபடா போன்றவர்களை காட்டிலும் அற்புதமாக பந்துவீசிய காரணத்தால் அதன்பின் நடந்த தென்னாப்ரிக்க தொடரில் தேர்வுக்குழு அவரை முதல் முறையாக தேர்வு செய்தது.

அதில் புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர்கள் இருந்த காரணத்தால் வாய்ப்பு பெறாத அவர் அதன்பின் நடந்த அயர்லாந்து தொடரிலும் பெஞ்சில் அமர்ந்திருந்தார். மறுபுறம் அவரைவிட வேகத்தில் மிரட்டிய உம்ரான் மாலிக் உடனடியான வாய்ப்பைப் பெற்று விவேகமாக பந்துவீச தவறியதால் வந்த வாக்கிலேயே காணாமல் போனார். ஆனால் பொறுமையாக காத்திருந்து இவருக்கு இங்கிலாந்து டி20 தொடரில் கிடைத்த வாய்ப்பில் விவேகமாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அசத்த துவங்கியுள்ளார்.

- Advertisement -

ஆரம்பத்திலேயே முதிர்ச்சி:
பெரும்பாலான பவுலர்கள் அறிமுகமான ஆரம்ப காலங்களில் தடுமாற்றத்துடன் செயல்பட்டு நாட்கள் செல்ல செல்ல தான் முதிர்ச்சியடைவார்கள். ஆனால் இந்த இளம் வயதிலேயே முரட்டுத்தனமான வேகத்தில் பந்து வீசாமல் நல்ல லைன், லென்த், ஸ்லோ பந்துகள், கட்டர் என துல்லியமாக பந்துவீசும் அத்தனை யுக்திகளையும் தெரிந்து வைத்து கச்சிதமாக பந்துவீசும் இவர் ஜாஹீர் கானுக்கு பின் ஒரு வழியாக தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார். இதனால் வரும் டி20 உலக கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தியா கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் ஆரம்ப காலத்திலேயே அர்ஷ்தீப் சிங் முதிர்ச்சியுடன் பந்து வீசுவது ஆச்சரியமாக உள்ளதாக சீனியர் இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பாராட்டியுள்ளார். இது பற்றி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரைப் பற்றிய சிறந்த விஷயம் என்னவெனில் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட என்ன தேவை என்பது அவருக்கு தெரிந்துள்ளது. குறிப்பாக எந்த தருணத்தில் எந்த வகையான பீல்டிங் செட் செய்வது, களத்தில் இருக்கும் குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு எந்த வகையான பந்து வீசுவது போன்ற அம்சங்களை அவர் தெரிந்து வைத்துள்ளார்”

“கிரிக்கெட்டில் இதுபோல் ஒருசில அறிமுக வீரர்கள் மட்டுமே இந்த அளவுக்கு முதிர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பெரும்பாலும் நீங்கள் விளையாட விளையாட தான் முதிர்ச்சியடைவீர்கள். ஆனால் இவர் முதிர்ச்சியுடன் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் சமீபத்திய சீசன்களில் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்”

“அவருக்கு போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துள்ளது. மேலும் போட்டியை பற்றி அவர் அதிகமாக சிந்தித்து அதற்கேற்றவாறு திட்டங்களை வகுக்கிறார்” என்று கூறினார். இந்திய கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் தான் வேகத்தை நம்பாமல் விவேகத்தால் நீண்ட காலம் விளையாட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அப்படிப்பட்ட அவரே இந்த இளம் பவுலரை பாராட்டுவது அவரின் திறமைக்கு சான்றாகும்.

Advertisement