- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதனால இந்திய அணிக்கு பிரச்சனையில்ல.. அப்போல்லாம் பேசாம இப்போ மட்டும் கேள்வி கேட்கலாமா? புவி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதனால் தென்னாப்பிரிக்காவிடம் 15 வருடங்கள் கழித்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது. அத்துடன் சொந்த மண்ணில் குறைந்தபட்ச இலக்கை (124) சேசிங் செய்ய முடியாமல் இந்தியா அவமான சாதனையையும் படைத்தது.

அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு முன் 2024இல் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கும் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்களே முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

தோல்வியும் விளையாட்டின் அங்கமே:

ஆனால் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து அவமானத் தோல்வியைச் சந்தித்துள்ளது. அது பற்றி கேட்டதற்கு தாங்கள் தான் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். அதனால் ஏராளமான முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் மோசமான பிட்ச்சை அமைத்து சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டு இந்திய அணியையும் கௌதம் கம்பீரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்தக் காலங்களிலும் இந்தியாவில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சுகள் இருந்ததாக புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது இந்திய அணி வெற்றி பெற்றதால் அமைதியாக இருந்த அனைவரும் தற்போது தோற்றதால் கேள்வி எழுப்புவதாக புவனேஸ்வர் கூறியுள்ளார். மேலும் தோல்வியிலிருந்து இந்தியா கம்பேக் கொடுத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்பதால் கொல்கத்தா தோல்வி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

கவலைப்படாதீங்க இந்தியா மீண்டு வரும்:

இது பற்றி புவனேஸ்வர் குமார் பேசியது பின்வருமாறு. “சுழலுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் இந்தியா வெற்றி பெற்றதால் யாருமே அதைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை. வெற்றியைப் போல தோல்வியும் விளையாட்டின் ஒரு அங்கமாகும். இதற்கு முன் இந்திய அணி அது போன்ற ஆடுகளங்களில் தோல்வியை சந்தித்ததில்லை என்று அர்த்தமல்ல”

இதையும் படிங்க: கம்பீர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யாம.. இதை செஞ்சாலே இந்தியா வெற்றி பெறும்.. கங்குலி அட்வைஸ்

“இப்போது தோல்வியை சந்திப்பதும் முதல் முறையும் அல்ல. எனவே இந்த தோல்வி எனக்குப் பெரிய கவலையாகத் தெரியவில்லை. நம்மிடம் 4 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். எனவே நம்முடைய பலத்தை வைத்து வெற்றி பெறுவதற்காக சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம்மிடம் நல்ல ஸ்பின்னர்கள் இருப்பதால் அவர்கள் அனைவரையும் விளையாட வைப்பது சரியான முடிவு. இருப்பினும் அப்போட்டி கையை மீறி சென்றது” என்று கூறினார்.

- Advertisement -