தேவையா இது! சுவரை எகிறி குதித்து வசமாக சிக்கிய 4 இந்திய ரசிகர்கள் – போலீஸ் கேஸ் பாய்ந்தது

Virat Kohli Fans
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றுள்ளது. பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் துவங்கிய இந்த தொடரின் 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து தனது முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இலங்கை பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் விளாசினார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொகாலியில் நடந்த முதல் போட்டியை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் காரணமாக 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்சை 303/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக மீண்டும் பேட்டிங்கில் அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்களும் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 447 என்ற இமாலய இலக்கை துரத்திய இலங்கைக்கு அந்த அணிக்கு கேப்டன் திமுத் கருணரத்னே சதமடித்து 107 ரன்கள் விளாசி தோல்வியை தவிர்க்க தனி ஒருவனாக போராடினார். இருப்பினும் குஷால் மெண்டிஸ் 54 ரன்கள் தவிர இதர இலங்கை வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த அணி வெறும் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 2 – 0 என்ற கணக்கில் இத்தொடரை வென்று கோப்பையை முத்தமிட்டது.

பெங்களூருவில் கிங் கோலி:
முன்னதாக இந்த போட்டியில் விளையாடிய இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியை பார்ப்பதற்காக போட்டி தொடங்க 2 நாட்களுக்கு முன்பாகவே முண்டியடித்த பெங்களூரு ரசிகர்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கினர். ஏனெனில் ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட கடந்த 2008 முதல் ஒரு சீசன் கூட தவற விடாமல் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் விளையாடி வரும் அவர் பெங்களூர் மக்களில் ஒருவராக மாறியுள்ளார்.

- Advertisement -

சொல்லப்போனால் டெல்லிக்கு அடுத்து 2-வது வீடாக விளங்கும் பெங்களூருவில் அவருக்கென்று லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள். அப்படிப்பட்ட நிலையில் நடந்த இப்போட்டியில் அவர் களமிறங்கிய போது விராட்.. விராட் என பெங்களூர் நகரமே அதிரும் அளவுக்கு பலத்த கரகோஷத்துடன் கூச்சலிட்ட அவர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். மேலும் இந்தப் போட்டி நடந்த போது இந்தியா.. இந்தியா எனக்கூட கோசமிடாமல் விராட்.. விராட்.. மற்றும் ஆர்சிபி.. ஆர்சிபி.. என முழங்கிய அவர்கள் விராட் கோலி மீது தங்களது பாசத்தை பொழிந்தனர் என்றே கூறலாம்.

கைதான ரசிகர்கள்:
குறிப்பாக இந்த போட்டி நடந்த 2-வது நாளன்று விராட் கோலியின் 4 தீவிரமான ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக பெங்களூர் மைதானத்தில் இருந்த பாதுகாப்பு வேலியில் ஏறி எகிறி குதித்து மைதானத்திற்குள் நுழைந்தனர். யாரும் எதிர்பாரா வண்ணம் இந்த செயலை செய்த அவர்கள் மைதானத்தில் இருந்த பாதுகாவலர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு வேக வேகமாக ஓடி விராட் கோலியுடன் புகைப்படம் எடுக்க முயன்றார்கள். அதற்கு அவரும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

செல்பி எடுத்து முடிக்கும் வேளையில் அந்த ரசிகர்களை நெருங்கிய பாதுகாவலர்கள் அவர்களை வெளியேற்ற முயன்றனர். அப்போது தனது ரசிகர்களை எதுவும் செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக் கொண்டதால் அந்த 4 ரசிகர்கள் மீது எந்தவித தாக்குதலையும் நடத்தாமல் மரியாதையுடன் மைதானத்திற்கு வெளியே பாதுகாவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் மைதானத்திற்குள் அத்துமீறிய 4 இந்திய ரசிகர்களை போட்டி முடிந்த பின் மடக்கிப் பிடித்த மைதான பாதுகாவலர்கள் அவர்களை அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். அந்த 4 பேரில் 2 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் என சுப்போன் பார்க் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தற்போது காவல் நிலையத்தில் உள்ள அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள் என தெரியவருகிறது. மொத்தத்தில் தமக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை பார்ப்பதற்காக ரகளை செய்த இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை பார்க்கும் பலரும் இது தேவையா என சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.

Advertisement