Test
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 669 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 150, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியாக 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்தியாவுக்கு சுதர்சன், ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார்கள்.
கெஞ்சிய கிராவ்லி:
அதனால் 0/2 என திணறிய இந்தியா தோல்வியை சந்திக்குமோ என்று ரசிகர்கள் அச்சப்பட்ட நிலையில் ராகுல் 90, கில் 103 ரன்கள் அடித்து கை கொடுத்தனர். அடுத்ததாக விளையாடிய ஜடேஜா, சுந்தர் ஆகியோரும் இங்கிலாந்துக்கு தொல்லையாக மாறி சதத்தை நெருங்கினார்கள். அதனால் 386/4 ரன்கள் நிலையில் இருந்த இந்தியா 75 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஜடேஜா 89*, சுந்தர் 80* ரன்களுடன் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். அப்போது போட்டியை நாங்கள் முடித்துக் கொள்கிறோம் கையை கொடுங்கள் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வந்து இந்தியாவிடம் தாமாக கையைக் கொடுத்தார். குறிப்பாக இனிமேல் இந்தியாவை சாய்க்க முடியாது என்பதை உணர்ந்த அவர் சுந்தர், ஜடேஜாவை சதமடிக்க விடாமல் போட்டியை டிரா செய்யலாம் என்ற வெறுப்பான எண்ணத்துடன் கையைக் கொடுக்க வந்தார்.
ஸ்டோக்ஸ் வேலை:
அப்போது தங்களுடைய சதத்தை பற்றி நினைக்காத சுந்தரும் ஜடேஜாவும் கேப்டன் கில்லை பார்த்தார்கள். ஆனால் பெவிலியனில் இருந்த கில் எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. அப்போதும் “கையை கொடுங்கள், மேட்சை முடித்து விட்டு போகலாம்” என்று கெஞ்சாத குறையாக இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி சொன்னார். அதற்கு “கேப்டன் சொல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று ஜடேஜா சொன்னதால் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
இதையும் படிங்க: 7 முறை 350.. தோல்விக்கு அடங்க மறுத்து இங்கிலாந்தை கெஞ்ச வைத்த இந்தியா.. ஆஸியை முந்தி உலக சாதனை
இறுதியில் ஜடேஜா, சுந்தர் இருவரும் சதத்தை அடித்ததும் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அதைப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய அணி சொந்த சாதனைகளுக்காக நேர்மைத் தன்மையுடன் விளையாடவில்லை என்று விமர்சிக்கிறார்கள். அதற்கு “உண்மையாகவே வெற்றி மீது அக்கறை இருந்திருந்தால் 4வது நாளில் 200+ ரன்களை முன்னிலையாக பெற்றதும் டிக்ளேர் செய்திருக்கலாமே” என்று இங்கிலாந்தினருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி போகிறார்கள். குறிப்பாக உங்கள் கேப்டன் ஸ்டோக்ஸ் சுயநலமாக சதத்தை அடிக்காமல் முன்னதாகவே டிக்ளேர் செய்திருந்தால் இந்தியாவை ஆல் அவுட்டாக்கி வெற்றி பெற எக்ஸ்ட்ரா நேரம் கிடைத்திருக்குமே என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.



