இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் ஒரு போட்டியில் 5 சதங்களை அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை இந்தியா படைத்தது.
அதன் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்களின் போராட்டம் வீணானது என்றே சொல்லலாம். குறிப்பாக 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த ரிசப் பண்ட் போராட்டம் வீணானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து பாடத்தைக் கற்றுள்ள இந்தியா பர்மிங்கம் நகரில் ஜூலை இரண்டாம் தேதி துவங்கும் 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது.
ரொம்ப டேஞ்சரான பிளேயர்:
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் ஒரே போட்டியில் 2 சதங்கள் அடித்த ரிஷப் பண்ட் மிகவும் ஆபத்தான வீரர் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டியுள்ளார். அவருடைய ஆட்டத்தைத் தாம் ரசித்துப் பார்ப்பதாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி அதிரடியாக விளையாடும் போது ரிஷப் பண்ட் விக்கெட்டை இழப்பதற்கும் அதிக வாய்ப்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனவே அவரை அதிரடியாக விளையாட விட்டு விரைவாக விக்கெட்டை எடுத்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ஸ்டோக்ஸ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் கிரிக்கெட்டை விளையாடும் விதத்தை நான் விரும்பிப் பார்க்கிறேன். அனைத்து வகையான ஃபார்மெட்டிலும் அவர் அதிரடியாக விளையாடுவதையும் விரும்புகிறேன்”
ஸ்டோக்ஸ் பாராட்டு:
“சில நேரங்களில் தேக்கம் ஏற்படுகிறது. அவரைப் போன்ற திறமையை சுதந்திரமாக விடும் போது கடந்த வாரம் நடந்த விஷயங்கள் தான் நடக்கும். ஒரு போட்டியில் 2 சதங்கள் அடித்த அவருக்குப் பாராட்டுக்கள். ரிஷப் பண்ட் விளையாடும் விதத்தில் எங்களுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். வித்தியாசமான நாட்களில் அவர் அடிக்கும் ஷாட்டுகளில் சில நேராக கைகளுக்கு சென்று விடும்”
இதையும் படிங்க: 328 ரன்ஸ்.. ஜிம்பாப்வேயை ஊதித் தள்ளி உலக சாதனை வெற்றி.. மிரட்டிய இளம் தென் ஆப்ரிக்கா அணி
“ஆனால் ஆம் அவர் மிகவும் ஆபத்தான வீரர். இந்திய அணிக்காக அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் விளையாடுவதை நான் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்” என்று கூறினார். மேலும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தங்களுடைய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று ஸ்டோக்ஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



