பென் ஸ்டோக்ஸை நாங்க ஒன்னும் கழற்றி விடல.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

Ben Stokes
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை டிரேடிங் முறையில் மாற்றிக் கொள்வதுடன் தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டு வருகிறது. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டாக்ஸை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

2019 உலகக் கோப்பை ஃபைனலில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து முதல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2022 டி20 உலகக் கோப்பை பைனலிலும் அரை சதமடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக கருதப்படும் அவரை 2023 சீசன் ஏலத்தில் சென்னை 16.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியது.

- Advertisement -

சென்னையின் அறிவிப்பு:
இருப்பினும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதால் முழுவதுமாக 2023 ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே அறிவித்த அவர் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்தார். அதனால் 2023 தொடரில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் அதன் பின் தொடர்ந்து பெஞ்சில் அமர்ந்து சென்னை அணி சார்பில் இலவச சிகிச்சைகளை மேற்கொண்டு ஆஷஸ் தொடருக்காக தயாரானார்.

அதனால் தோனிக்கு பின் புதிய கேப்டனாக நியமிக்கலாம், ப்ராவோவுக்கு பதிலாக ஆல் ரவுண்டராக அசத்துவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்தை சந்தித்த சென்னை ரசிகர்கள் பேசாமல் இவரை கழற்றி விடுங்கள் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர். அந்த நிலைமையில் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பையிலும் காயம் காரணமாக பெரும்பாலும் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் தோல்வியில் முக்கிய காரணமாகவே இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் வரும் 2024 ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்தின் கேப்டனாக செயல்படுவதற்கு முன் பென் ஸ்டோக்ஸ் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். அதனால் 2024 ஐபிஎல் தொடரில் அவராக விலகுவதாக அறிவித்துள்ள சென்னை நிர்வாகம் தாங்கள் கழற்றி விடவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்னுமும் முடியல.. தோற்று 4 நாளுக்கு பின் வருத்தத்தை பகிர்ந்த கே.எல் ராகுல் – விவரம் இதோ

குறிப்பாக இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்பாக தம்முடைய பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக 2024 ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் முடிவை தாங்கள் மதிப்பதாகவும் சென்னை நிர்வாகம் கூறியுள்ளது. அந்த வகையில் பென் ஸ்டோக்ஸ் வெளியேறியுள்ளதால் கிடைத்த 16.25 கோடியையும் சேர்த்து ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலத்தில் சென்னை 28 கோடி ரூபாய்களுடன் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement