இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் ஜூலை இரண்டாம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை நன்றாக பவுலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து மடக்கியது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா வெற்றி:
அதைத்தொடர்ந்து 180 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 427/6 ரன்களை விளாசி செய்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் மீண்டும் சதமடித்து 161, ஜடேஜா 69*, ரிஷப் பண்ட் 65, ராகுல் 55 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் 608 ரன்களை துரத்திய இங்கிலாந்தை 271 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றி பெற்றது.
அதன் வாயிலாக பர்மிங்காம் மைதானத்தில் வென்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்த இந்தியா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் பிட்ச் தாங்கள் நினைத்தது போல் அல்லாமல் இந்தியாவுக்கு சாதகமாக மாறி காலை வாரியதாக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தோல்விக்கான காரணம்:
அத்துடன் முதல் இன்னிங்சில் 211/5 என தடுமாறிய இந்தியாவை மடக்கிப் பிடிக்காததும், 80/5 என திணறிய இங்கிலாந்து மேற்கொண்டு அசத்தாததும் தங்களுடைய தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோல்வியை 2 தருணங்கள் கொடுத்தன. 200/5 என தடுமாறிய இந்தியாவை சுருட்ட முடியாமல் போனதும், 80/5 என நாங்கள் தடுமாறியதும் முக்கிய காரணங்களாக அமைந்தன”
“அங்கிருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. 200/5 என இந்தியா தடுமாறிய போது நீங்கள் வலுவான நிலையில் இருந்தீர்கள். ஆனால் போட்டி ஆழமாக செல்லும் போது பிட்ச் நாங்கள் எதிர்பார்த்தது போல் விளையாடவில்லை. சொல்லப்போனால் அது இந்தியாவுக்கு அதிக பொருத்தமாக அமைந்தது. திட்டங்களை மாற்றி நாங்கள் அனைத்தையும் முயற்சித்தோம்”
இதையும் படிங்க: எல்லா நாளும் இந்தியா அதை மிஸ் பண்ணாது.. அவரோட பவுலிங் அற்புதமானது.. சரித்திர வெற்றி பற்றி கில்
“ஆனால் அதற்குள் எதிரணி மேலே சென்று விட்டால் போட்டியை மல்யுத்தம் செய்தும் மீண்டும் கொண்டு வருவது கடினமாக இருந்தது. சுப்மன் பேட்டிங்கில் நம்ப முடியாத வகையில் விளையாடினார். நாளின் இறுதியில் நீங்கள் பேட்டிங் செய்வது கடினமானதாக இருக்கும். ஜேமி ஸ்மித் அணிக்குள் வந்தது முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் விரும்பும் கீப்பருக்கு தகுந்தார் போல் அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.