
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வாரிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணியினர் மறுத்து விட்டனர்.
மறுபுறம் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பையை இந்திய அணியிடம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நம்பிக்கையுடனேயே இந்திய அணியினர் சுமார் 45 நிமிடங்கள் மைதானத்தில் காத்திருந்தனர். ஆனால் தன்னை அவமானப்படுத்திய இந்திய அணிக்கு கோப்பையை கொடுக்காத நக்வி கையோடு எடுத்துச் சென்றார்.
அதனால் அவர் ஆசிய கவுன்சில் தலைவராக நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று இந்திய ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். அதற்கு “ஜென்டில்மேனாக கோப்பையை கொடுக்க வரும் எங்கள் தலைவரிடம் இந்தியா வாங்க மறுத்தால் எப்படி கொடுப்பது?” பாகிஸ்தான் ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். இந்நிலையில் ஒருவேளை இந்தியா கோப்பையை வென்றால் நக்வி கைகளால் வாங்கப் போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்பே முடிவெடுத்து ஆசிய கவுன்சிலிடம் தெரிவிக்கப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கூறியுள்ளார்.
அது தெரிந்தும் ஆசிய கவுன்சில் தலைவரான நக்வி கோப்பையை வேறு நபரிடம் கொடுத்து கொடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மாறாக கோப்பையை கையோடு எடுத்துச் சென்ற நக்வி ஜென்டில்மேனா? என்றும் அவர் விமர்சித்துள்ளார். எனவே நக்வி மேல் ஐசிசியிடம் புகார் செய்ய உள்ளதாக தெரிவிக்கும் சைக்கியா இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து கோப்பையை வாங்க மாட்டோம் என்று நாங்கள் முடிவெடுத்தோம்”
“ஏனெனில் அவர் பாகிஸ்தான் தலைவர்களில் ஒரு சீனியராக இருக்கிறார். அது உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்ட முடிவு. அதற்காக தன்னுடன் கோப்பை மற்றும் மெடலை எடுத்துச் செல்வதற்கான உரிமை அவருக்கு கிடையாது. துரதிஷ்டவசமாக அது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது. நாங்கள் கோப்பையும் மெடல்களும் விரைவில் இந்தியா திரும்பும் என்று நம்புகிறோம்”
இதையும் படிங்க: சூரியகுமார் கேமரா முன் இரட்டை வேடம் போட்டாரு.. இந்தியாவின் செயல் அவமானமானது.. கேப்டன் விமர்சனம்
“இதே துபாயில் வரும் நவம்பர் மாதம் ஐசிசி கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நாங்கள் ஆசியக் கவுன்சில் தலைவர் செய்த விஷயங்களுக்காக வலுவான தீவிரமான போராட்டத்தை முன்னோக்கி எடுக்க உள்ளோம்” என்று கூறினார். இதற்கிடையே ஐசிசி தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருப்பதால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்ற சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.