சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கிய பிசிசிஐ – 5 காரணங்களும் புதிய குழுவுக்கான ஸ்ட்ரிக் ரூல்ஸ் இதோ

Chetan Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாலமாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி கொஞ்சமும் போராடாமல் தோல்வியை சந்தித்து வெளியேறியது. இத்தனைக்கும் அதிகப்படியான அழுத்தம் கொண்ட ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த உலகத்தரமான வீரர்களுடன் தர வரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்தது அனைவரையும் கடுப்பாக வைத்தது. அந்த தொடரில் விராட் கோலி போன்ற ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்களை அதிரடியாக நீக்கி விட்டு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

அப்படி ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களைப் போலவே இந்த உலகக்கோப்பை தோல்வியால் இந்திய கிரிக்கெட் வாரியமும் அதிருப்தியடைந்துள்ளது. அதனால் வருங்காலத்தில் புதிய அணியை உருவாக்கி வெற்றி நடை போடுவதற்கு முதல் படியாக சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை பிசிசிஐ நேற்றிரவு கூண்டோடு அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த 2020 டிசம்பர் மாதம் தேர்வு குழுவின் புதிய தலைவராக சேட்டன் சர்மாவும் துணை உறுப்பினர்களாக ஹர்விந்தர் சிங், சுனில் ஜோசி, டெபாசிஸ் மோகண்டி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

- Advertisement -

சொதப்பலான செயல்பாடுகள்:
இவர்களது தலைமையில் சாதாரண இரு தரப்பு தொடர்களில் அசத்திய இந்தியா 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சந்தித்த தோல்வியை விட துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானிடம் படுதோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் அதற்கான பழியை விராட் கோலி மீது போட்ட தப்பித்த தேர்வுக்குழு தேர்வு செய்த இந்திய அணி புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்த வருடம் ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மீண்டும் படுதோல்விளை சந்தித்து வெளியேறியது.

இந்தியா தோற்றதற்கு தேர்வுக்குழு என்ன செய்வார்கள் என்று கேட்கிறீர்களா? இவர்கள் செய்த குளறுபடிகள் பின்வருமாறு.
1. முதலில் கடந்த ஒரு வருடத்தில் நிலையான ஒரு இந்திய அணியை இவர்களால் தேர்வு செய்ய முடியவில்லை. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு காலண்டர் வருடத்தில் 8 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டது.

- Advertisement -

2. 2022 ஆசிய கோப்பையில் வேகத்துக்கு சாதகமான துபாயில் குறைந்தபட்சம் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இவர்கள் 3 பேரை மட்டுமே தேர்வு செய்தனர். அதனால் சுமாராக செயல்பட்ட ஆவேஷ் கானை அதிரடியாக நீக்கிய போது அவருகு பதில் தேர்வு செய்வதற்கு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் இல்லாத காரணத்தால் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்திய அவலம் ஏற்பட்டது.

3. மேலும் இந்தியாவுக்காக கடந்த ஜனவரியில் கடைசியாக விளையாடியிருந்த ராகுல் இடையே காயத்தை சந்தித்ததால் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் உலக கோப்பைக்கு ஒரு மாதம் முன்பாக 7 மாதங்கள் கழித்து நேரடியாக நட்சத்திர அந்தஸ்தை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

4. அத்துடன் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தும் இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் நட்சத்திர அந்தஸ்துக்கு தேர்வுக்குழு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தனர்.

5. அது போக வீரர்கள் பயிற்சி செய்யும் போது அல்லது மைதானத்தில் விளையாடும் போது அதில் தரமானவர்களை நேரடியாக பார்த்து தேர்வு செய்யும் முறையை சேட்டன் சர்மா தலைமையிலானா குழு பின்பற்றவில்லை என்று பிசிசிஐ கண்டறிந்துள்ளது.

இது போன்ற காரணங்களால் அவர்களை அதிரடியாக நீக்கியுள்ள பிசிசிஐ புதிய தேர்வு குழுவுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் வரும் நவம்பர் 18 மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 7 டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும் அல்லது 30 முதல் தர போட்டியில் விளையாடியிருக்க வேண்டும் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

அதுபோக வீரர்களை திறமையின் அடிப்படையில் நேரடியாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் விளையாடும் இடத்திற்கு பயணித்து திறமைகளை அறிய வேண்டும். அணி தேர்வின் போது ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் போன்ற புதிய விதிமுறைகளையும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது

Advertisement