
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்ற முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கடந்த 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி பெற்ற வெற்றிக்கு பின்னர் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2024 டி20 உலக கோப்பை கைப்பற்றி அசத்தியது.
கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களின் இறுதி போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்து வந்த இந்திய அணியானது இம்முறை கோப்பையை கைப்பற்றியதால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
அதோடு இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு 125 கோடி பரிசாக வழங்குவதாக அறிவித்தது. அதோடு பல்வேறு தரப்பிலிருந்து இந்திய அணிக்கு வாழ்த்துக்களும் பரிசுத்தொகையும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் பி.சி.சி.ஐ அறிவித்த 125 கோடி ரூபாயில் யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்? என்பது குறித்த விவரத்தையும் தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டி20 உலக கோப்பை தொடரில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி வழங்கப்பட இருக்கிறது.
அதேபோல் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடுக்கு 5 கோடி ரூபாயும், பேட்டிங், பௌலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாயும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ராகுல் டிராவிடுக்கு அந்த விருதினை வழங்கினால் அது சரியாக இருக்கும் – சுனில் கவாஸ்கர் கோரிக்கை
அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று பிற ஊழியர்களுக்கு 2 கோடியும் தேர்வுக்கு குழுவினருக்கு தலா ஒரு கோடியும், ரிசர்வ் வீரர்களாக பயணித்த நான்கு பேருக்கும் தலா ஒரு கோடியும் வழங்கப்படும் என்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.