நீங்க ரிட்டையரே ஆகவேண்டாம், நாங்க எங்க வேலையை பாத்துகிறோம் – சீனியர்களை டாட்டா காட்டும் பிசிசிஐ

BCCI-and-Rohit
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரது தலைமையில் இளம் கிரிக்கெட் அணி களமிறங்கினாலும் அடுத்ததாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பையில் மீண்டும் ரோகித் சர்மா தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டி20 உலக கோப்பையில் விராட் கோலி, சூர்யா குமார் யாதவ் ஆகிய ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

INDia Hardik pandya

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் அசத்தலாக விளையாடும் பெரும்பாலான சீனியர் வீரர்கள் நாட்டுக்காக என்று வரும் போது ஓய்வெடுப்பதும் தடவலாக செயல்படுவதும் ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. அதனால் அடுத்ததாக 2024இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே வலுவாக எழுந்தது. அதற்கு செவி சாய்த்த பிசிசிஐ முதலில் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவைக் கூண்டோடு நீக்கியது. அத்துடன் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பதே புதிய தேர்வுக்குழுவின் முதல் வேலையாக இருக்கும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரிட்டையர் ஆகவேண்டாம்:

மேலும் டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே நியூசிலாந்து தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா விரைவில் நிரந்தர கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்ற செய்திகளும் ஏற்கனவே வந்துள்ளன. இந்த அடுத்தடுத்த அதிரடியான நிகழ்வுகளால் இந்திய அணியில் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சில எதிர்பாராத ஓய்வு முடிவுகள் வெளியாகும் என்று சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் கணித்தார்கள். ஆனால் உலகக்கோப்பை முடிந்து நியூசிலாந்து தொடரும் முடியப்போகும் நிலையில் அஷ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட எந்த சீனியர் வீரர்களும் இதுவரை ஓய்வு என்ற வார்த்தைகளை அறிவிக்காமல் மௌனமாக இருந்து வருகிறார்கள்.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

இந்நிலையில் சீனியர் வீரர்களை யாரும் ஓய்வு பெற சொல்லி கட்டாயப் படுத்தவில்லை என்று தெரிவிக்கும் பிசிசிஐ அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமலேயே டி20 கிரிக்கெட்டில் கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது. குறிப்பாக 2023இல் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடைபெற உள்ளதால் அதில் கவனம் செலுத்த போகும் சீனியர் வீரர்களை குறைவாக நடைபெறும் டி20 போட்டிகளில் பார்க்க முடியாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் சமீபத்தில் கொடுத்த அதிகாரப்பூர்வ பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பிசிசிஐ யாரையும் ஓய்வு பெற சொல்லி கேட்கப் போவதில்லை. ஏனெனில் ஓய்வு என்பது அவரவர் கேரியரில் எடுக்கும் தன்னிச்சையான சொந்த முடிவாகும்”

- Advertisement -

“ஆனால் ஆம் 2023இல் கணிசமான டி20 போட்டிகள் இருந்தாலும் பெரும்பாலான சீனியர் வீரர்கள் அந்த கால அட்டவணையில் அதிகமாக நடைபெறும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்துவார்கள். எனவே நீங்கள் ஓய்வு பெற விரும்பவில்லை என்றால் ஓய்வு பற்றி அறிவிக்க தேவையில்லை. அதே சமயம் அடுத்த வருடம் நடைபெறும் டி20 போட்டிகளில் நீங்கள் சீனியர் வீரர்களை பெரும்பாலும் பார்க்க முடியாது” என்று கூறினார். அதாவது 2023 உலக கோப்பைக்கு முன்பாக 25 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா 12 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது.

Rohit Sharma IND

அந்த 25 ஒருநாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் வழக்கம் போல ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கும் பிசிசிஐ 12 டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இதிலிருந்து கடந்த காலங்களில் யுவராஜ் சிங் போன்ற முக்கிய வீரர்கள் தங்களுடைய கேரியரின் கடைசி கட்டங்களில் வாய்ப்பு கிடைக்காமல் செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக ஓய்வை அறிவித்தது போன்ற நிலைமையை டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement