ஓய்வடைந்த வீரர்களின் வாழ்வை மேம்படுத்த பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்பாடு – நன்றியுடன் குவியும் பாராட்டு

Ganguly
- Advertisement -

இந்தியாவில் தேசிய விளையாட்டாக கருதப்படும் ஹாக்கி உட்பட நிறைய விளையாட்டுக்கள் இருந்தாலும் கிரிக்கெட் என்பது மக்கள் மற்றும் ரசிகர்களின் உணர்வுடன் கலந்த ஒரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் எனும் அளவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இதை விரும்பி பார்ப்பதுடன் தங்களது உயிராகவும் நினைக்கின்றனர். அந்த வகையில் உலக அளவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற உலகத்தரம் வாய்ந்த நம்பர் ஒன் கிரிக்கெட் அணிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவும் நம்பர் ஒன் அணியாக வலம் வருகிறது.

அப்படிப்பட்ட இந்த கிரிக்கெட் ஆரம்பத்தில் வெள்ளையர்களால் இந்திய மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு சுதந்திரம் அடைந்த பின் பிசிசிஐ எனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கிரிக்கெட் இந்த அளவுக்கு புகழ் பெறுவதற்கு கடந்த 60க்கும் மேற்பட்ட வருடங்களாக விளையாடிய வீரர்களும் வீராங்கனைகளும் முக்கிய காரணமாக திகழ்கின்றனர். சொல்லப்போனால் அவர்கள் இல்லை என்றால் இந்திய கிரிக்கெட் இல்லை என்ற வகையில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி முழுமூச்சுடன் விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகள் நாட்டுக்காக பல வெற்றிகளை தேடி கொடுத்து இளைஞர்களுக்கு ரோல் மாடல்களாக அமைக்கின்றனர்.

- Advertisement -

கங்குலி அறிவிப்பு:
அவர்களை பார்த்து தான் நிறைய இளம் வீரர்கள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வத்துடன் வந்து கொண்டே இருப்பதால் உலகில் இந்தியா நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்று விடும் கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது இளம் காலத்தில் விளையாட்டில் கவனம் செலுத்தியதால் அதிலிருந்து வெளியேறிய பின் வேறொரு வாழ்க்கையை தொடங்க வேண்டியுள்ளது. அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கடந்த பல வருடங்களாகவே அவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வாயிலாக பென்ஷன் தொகையை மாதாமாதம் பிசிசிஐ அளித்து வருகிறது. அதேபோல் அம்பயர்களாக பணியாற்றியவர்களுக்கும் அதற்கேற்ற ஓய்வூதியத்தை பிசிசிஐ கொடுத்து வருகிறது.

இந்த நிலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அம்பயர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வு தொகையை உயர்த்தி பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பின்வருமாறு. “நமது முன்னாள் கிரிக்கெட்டர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையுடன் இருப்பதை பார்த்துகொள்ள வேண்டியது நமது கடமையாகும். நமது வாரியத்தை நம்பியிருக்கும் வீரர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது நமது கடமையாகும். அதேபோல் மறைமுக ஹீரோக்களான அம்பயர்களின் பங்கையும் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

இது பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது பின்வருமாறு. “நமது இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் நலத்தை பாதுகாக்க வேண்டியது முதன்மையானதாகும். அந்த வகையில் அவர்களின் ஓய்வூதியத்தை அதிகரிப்பது அதில் ஒரு பகுதியாகும். அதேப்போல் இந்திய கிரிக்கெட்டுக்கு அம்பயர்களும் பங்காற்றியுள்ளார்கள். எனவே இந்த திட்டத்தில் பயன்பெறும் வரும் சுமார் 900 பேரில் 75% அதிகமானோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தில் 100% என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் படி ஏற்கனவே 15000 ரூபாய் ஓய்வூதியம் பெறுபவர்கள் இனிமேல் 30000 ரூபாய் பெற உள்ளனர். 22500 ரூபாய் ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் இனிமேல் 45000 ரூபாய் பெற உள்ளனர். 30000 ரூபாய் ஓய்வூதியம் பெற்று வந்தவர்கள் இனிமேல் 52500 ரூபாய் பெறவுள்ளனர். அதேபோல் 37500 ரூபாய் பெற்று வந்தவர்கள் இனிமேல் 60000 ரூபாய் ஓய்வூதியம் பெற உள்ளனர். மேலும் 50000 ரூபாய் ஓய்வூதியம் பெற்று வந்தவர்கள் இனி 70000 ரூபாய் ஓய்வூதியம் பெற உள்ளனர். இந்த அறிவிப்பு ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலில் வந்துள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : அனைவரும் வியக்கும் வகையில் மீண்டும் உலகசாதனை படைத்த ஆண்டர்சன் – முரளியை முந்துவரா?

இந்த அறிவிப்பால் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வீராங்கனைகளும் அம்பயர்களும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தனது தந்தை முஹம்மது தாரீப் இந்த அறிவிப்பால் மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு பிசிசிஐ வழிவகை செய்துள்ளதாக சவுரவ் கங்குலிக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement