இந்திய அணி டிசம்பர் 17ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறது. இதனைத் தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். இதற்காக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது பகலிரவு ஆட்டத்தில் விளையாடி வருகிறார்கள். இந்திய அணியில் பேட்டிங் பிரச்சனை இருக்கிறது. விராட் கோலியும் முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் சென்றுவிடுவார். ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டிக்கு இருக்கமாட்டார். தற்போது ஆடி வரும் இளம் வீரர்கள் அந்த அளவிற்கு தெளிவாக ஆடுவதில்லை.
இதன் காரணமாக டெஸ்ட் தொடரில் பெரிய பிரச்சினை இருப்பதாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர். இதில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவர்தான் வேகப்பந்து வீச்சாளராக அணியில் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.
அப்படி அவர்களுக்கு காயம் ஏற்பட்டுவிட்டால் மீதமிருக்கும் உமேஷ் யாதவ் அல்லது நவதீப் சைனி ஆகியோர் களம் இறங்குவார்கள். அப்படி இருக்கையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தங்கராசு நடராஜன் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிந்த பின்னர் அனைவரும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். ஆனால் இந்த மூன்று வீரர்கள் மாற்று வீரர்களாக இருப்பார்கள் என்று அறியப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இரண்டு வீரர்கள் இருக்கும்போது மேலும் மூன்று வீரர்கள் அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் மாற்று வீரராக அழைக்கப்பட்டு இருப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மாற்று வீரர்களாக நடராஜன் மற்றும் தாகூரும், அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டால் மாற்றுவீரராக சுந்தரும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பேக்அப் பவுலர்களாக இருக்கும் இவர்கள் மூவரும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு வலைப்பயிற்சியின்போது பந்துவீசுவார்கள் என்றும் தெரிகிறது.