
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய மாதங்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதன் காரணமாக இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தற்போது 10 கட்டுப்பாடான விதிமுறைகளை அறிவித்துள்ளது. அவற்றை பார்ப்போம்:
1. இந்திய அணிக்காக விளையாட, மத்திய சம்பள ஒப்பந்தத்திலும் இடம் பிடிக்க வேண்டுமெனில் அனைத்து வீரர்களும் ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடுவது அவசியம்.
இந்த முடிவு இளம் வீரர்கள் நட்சத்திர வீரர்களுடன் மோதுவதற்கான வாய்ப்பையும் உள்ளூர் கிரிக்கெட்டை வளப்படுத்தும் நோக்கத்திலும் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.
2. அனைத்து வீரர்களும் போட்டி மற்றும் பயிற்சிகளுக்கு அணியாக பயணிக்க வேண்டும். குடும்பங்களுடன் பயணிக்க முடியாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.
3. வீரர்கள் தங்களுடைய உடமைகளை எடுத்துச் செல்வதற்கும் பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. 30 நாட்களுக்கு மேலான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் அதிகபட்சமாக 150 கிலோ, பயிற்சியாளர்கள் அதிகபட்சமாக 80 கிலோ பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். 30 நாட்களுக்குள் நடைபெறும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் வீரர்கள் 120, பயிற்சியாளர்கள் 60 கிலோ பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் வீரர்கள் 120 கிலோ, பயிற்சியாளர்கள் 60 கிலோ மட்டுமே பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
4. வீரர்களும் பயிற்சியாளர்களும் தங்களுக்கென்று தனிப்பட்ட மேனேஜர்கள், பாதுகாவலர்கள் ஆகியோரை பிசிசிஐ அனுமதி இல்லாமல் அழைத்து வரக்கூடாது.
5. வீரர்கள் எடுத்துச் செல்ல விரும்பும் உபகரணங்கள் மற்றும் சொந்த பொருட்களை பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டும் பொருட்களுக்கான செலவை வீரர்களே பொறுப்பேற்க வேண்டும்.
6. அனைத்து வீரர்களும் அனைத்து பயிற்சி மற்றும் பயணத்தில் ஒன்றாக பங்கேற்க வேண்டும். இது அணியின் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.
7. ஒரு தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீரர்கள் விளம்பரங்களில் நடிப்பதற்கு அனுமதிக்கப்படாது. இந்த விதிமுறை கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
8. தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீரர்கள் தங்களுடைய குடும்பத்தை காண்பதற்கும் பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
9. இந்திய அணி பங்கேற்கும் தொடர்களை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வுகளில் அனைத்து வீரர்களும் பங்கேற்பது கட்டாயம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
10. தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் தொடர் முடியும் வரை அல்லது போட்டிகள் முன்னதாகவே முடிந்தாலும் அணியுடன் இருக்க வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும்.