
பதிமூன்றாவது சீசனாக ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்க உள்ள இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான போட்டிகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து லீக் ஆட்டங்கள் மற்றும் பல விளையாட்டுகள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு 45 க்கும் மேலான நபர்கள் பாதிக்கப்ட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்திய அரசாங்கம் தற்போது முழு கவனிப்புடன் அனைத்து செயல்களையும் செய்து வருகிறது.
இதனால் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போகுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் சிலர் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் இரண்டு அணிகளின் வீரர்கள் மற்றும் அம்பயர்களை கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்றும் சிலர் யோசனைகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஐ.பி.எல் போட்டிகள் கட்டாயம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதுமட்டுமின்றி கரோனா வைரஸ் 29-ஆம் தேதிக்குள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்றால் பூட்டிய மைதானத்தில் போட்டி நடைபெறலாம் என்ற செய்தியும் உலா வந்தது. அது தவறான தகவல் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின்படி பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் : ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் இல்லை என்றும் கண்டிப்பாக ரசிகர்கள் உடனே ஐபிஎல் தொடர் நடைபெறும் ரசிகர்கள் பார்ப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வீரர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுப்பது வீரர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வது போன்றவை நடைபெறாமல் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மைதானத்திலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வும் அது குறித்த முன்னெச்சரிக்கை மருத்துவ ஏற்படும் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.