இந்தியா இங்கிலாந்து டி20 தொடர் : அடுத்த 3 போட்டிகளுக்கு இதற்கு அனுமதி கிடையாது – பி.சி.சி.ஐ அறிவிப்பு

INDvsENG

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலை அடைந்தது. இரண்டாவது போட்டியின் போது இந்திய அணியில் அறிமுக வீரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும்இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணி இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தவிர இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மாற்றம் இருக்காது.

மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற உள்ள 3ஆவது டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெறும் என்பதால் இந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது பிசிசிஐ தரப்பில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தி யாதெனில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை துவங்கியுள்ளதால் நாடு முழுவதும் ஆங்காங்கே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கூட நேற்று முதல் ஒரு வாரம் பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் இந்த நரேந்திரமோடி மைதானத்தில் இன்றிலிருந்து அதாவது மூன்றாவது டி20 போட்டியில் இருந்து ஐந்தாவது டி20 போட்டி வரை யாருக்கும் அதாவது ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் குஜராத் கிரிக்கெட் சங்கம் மூலமாக பி.சி.சி.ஐ நிர்வாத்திற்கும் இந்த நடவடிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களது கருத்தினை ஏற்ற பி.சி.சி.ஐ யும் ரசிகர்களை மைதானத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்களது கோரிக்கையை ஏற்பதாக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து வெளியான செய்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 3 போட்டிகள் ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2வது டி20 போட்டி வரை 50% ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது வீரர்களிடையே உற்சாகத்தை அளித்தது. மேலும் கடைசியாக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியை சுமார் 60 ஆயிரம் பேர் நேரில் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.