
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையில் வெற்றி இந்தியா சாதனை படைத்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சினைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது.
அதனால் 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்ற இந்தியா சாதனை படைத்தது. அத்துடன் 2002, 2013, 2025* என 3 சாம்பியன்ஸ் டிராபிகளை வென்ற முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையையும் இந்தியா படைத்தது. அந்த வெற்றி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் சந்தித்த தோல்விகளால் துவண்டு கிடந்த இந்திய ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்திய அணியை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பரிசுத்தொகை வழங்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்திய அணிக்கு பிசிசிஐ தலைவர் ரோஜார் பின்னி, செயலாளர் தேவஜீத் சைக்கியா, துணைத் தலைவர் ராஜேஷ் சுக்லா, பொருளாளர் பிரப்டேஜ் பாட்டியா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். உலக கிரிக்கெட்டில் தொடர்ந்து இந்தியா சிறந்து விளங்குவதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வசதிகளையும் ஊக்கத்தையும் தாங்கள் கொடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அதைத் தொடரும் நோக்கத்திலேயே இந்த பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து 58 கோடி ரூபாய் பரிசுத்தொகை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் 10 வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அப்படியே சாம்பியன்ஸ் ட்ராபி அணியில் இடம் பிடித்திருந்த மற்ற 4 வீரர்களுக்கும் பரிசுத்தொகை கொடுக்கப்பட உள்ளது. அது போக பயிற்சியாளர் கௌதம் கம்பீர், துணைப் பயிற்சியாளர்கள், உடல் பயிற்சியாளர்கள் மருத்துவக் குழுவினர் ஆகிய அனைவருக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக்கை அறிவித்த சாம்சன்.. காரணம் என்ன?
2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக ஐசிசி 20 கோடி ரூபாய்களை பரிசு தொகையாக கொடுத்திருந்தது. ஆனால் ஐசிசியை மிஞ்சும் அளவுக்கு பிசிசிஐ கிட்டத்தட்ட 3 மடங்கு அதிக பரிசுத்தொகையை இந்திய அணிக்கு வழங்கியுள்ளது. இதற்கு முன்பாக 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி என்ற பிரம்மாண்ட தொகையையும் பிசிசிஐ வழங்கியது குறிப்பிடப்பட்டது.