நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு நியூசிலாந்து ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களில் ஓவருக்கு 10 – 12 ரன்ரேட்டில் ரன்கள் அடிக்க முயற்சிப்பது வெற்றியை கொடுக்காது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு செசனாக விளையாட சொல்லிக் கொடுக்காத இந்தியாவின் பேட்டிங் கோச் யார்? ஒவ்வொரு ஓவரிலும் 10 – 12 ரன்கள் அடிக்க முயற்சிப்பது டெஸ்ட் கிரிக்கெட் கிடையாது. 30 – 35 ரன்கள் தொட்ட பின் சுமாரான ஷாட்டை அடிக்காமல் நங்கூரமாக விளையாடுங்கள் என்று ஜெய்ஸ்வாலிடம் சொல்வதற்கு யாரும் இல்லையா”
சுமாரான கோச்சிங்:
“ஏனெனில் சுழலலுக்கு சாதகமான மைதானங்களில் செட்டிலாகி விளையாடும் பேட்ஸ்மேன்கள் மட்டுமே வெற்றிகரமாக செயல்பட முடியும். அப்படி விளையாடும் பேட்ஸ்மேன் மட்டுமே பிராட்மேன் போல பேட்டிங் செய்ய முடியும். ஆனால் அவர்கள் விராட் கோலி, ரிஷப் பண்ட், ராகுல், சர்பராஸ் கான் ஆகியோர் அடுத்ததாக வர உள்ளதால் நாம் அதிரடியாக விளையாடுவோம் என்பது போல் பேட்டிங் செய்ததாக தெரிகிறது”
“உண்மையில் இது போன்ற மைதானங்களில் செட்டிலாகி விளையாடும் பேட்ஸ்மேன் தான் பெரிய வீரர். ஆனால் அவற்றையெல்லாம் செய்வதற்கு பேட்ஸ்மேன்களை பக்குவப்படுத்தாத இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் யார்? வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நீங்கள் பந்தை நோக்கி சென்று அடிக்க வேண்டும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து உங்களை நோக்கி வரும் வரை காத்திருந்து அடிக்க வேண்டும்”
டிராவிட் பெஸ்ட்:
“அது தான் வித்தியாசமாகும். அதை சொல்வதற்கே பயிற்சியாளர்கள் அணியில் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக ஜெய்ஸ்வால் 200 ரன்கள் அடித்தார். அந்தத் தொடரில் நல்ல ஆடுகளங்கள் இருந்தன. கௌதம் கம்பீரை விட ராகுல் டிராவிட் பயிற்சியாளராக சிறந்த மனநிலையைக் கொண்டிருந்தார். அவர் 4 நாட்கள் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் அளவுக்கு பிட்ச்களை விரும்பினார்”
இதையும் படிங்க: 120/2 டூ 143க்கு அவுட்.. உலக சாதனை படைத்த ஷார்ஜா மைதானத்தில்.. சொதப்பிய வங்கதேசம்.. ஆப்கன் அபார வெற்றி
“ஆனால் இப்போது இருப்பவர்கள் முதல் நாளிலேயே பந்தை நேராக வீசினாலும் அது சுழலும் அளவுக்கு பிட்ச்களை விரும்புகிறார்கள். மிட்சேல் சான்ட்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கூட எடுத்ததில்லை. ஆனால் அவர் 13 விக்கெட்டுகள் எடுத்தார். அதே சமயம் இலங்கையில் தோற்று வந்து இங்கே சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட நியூசிலாந்துக்கு நான் பாராட்டு கொடுக்காமல் இருக்க மாட்டேன்” என்று கூறினார்.