ஹைப் பண்ணாதீங்க.. பார்டர் – கவாஸ்கர் கோப்பையை விட அந்த ஜாவ்லின், கபடி மேட்ச் தான் பெருசு.. பசித் அலி

Basit Ali 75
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் 2018/19 கோப்பையை வென்ற இந்தியா ரஹானே தலைமையில் 2020/21 வென்றது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைத்தது.

அந்த வரிசையில் தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இருப்பினும் இம்முறை கடந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால் அதற்கு பதிலடியாக இம்முறையும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறும் என ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

- Advertisement -

ஓவர் ஹைப்:
இந்நிலையில் இப்படியெல்லாம் பேசி பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். உண்மையில் அத்தொடரை விட அனைத்து வகையான விளையாட்டிலும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் தான் சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“அவர்கள் எதிர்பார்ப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மொத்த உலகிற்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் ஒருபுறமும் மற்ற அனைத்து போட்டிகள் மறுபுறமும் இருக்கும் என்பது தெரியும். ஆஷஸ் தொடர் கூட பெரியது கிடையாது. இருப்பினும் நீங்கள் அது போன்ற கருத்துக்களை கேட்கிறீர்கள். உண்மையில் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ராவை அர்ஷத் நதீம் வீழ்த்தினார்”

- Advertisement -

“அது இந்தியா வெல்ல வேண்டிய தங்கப்பதக்கமாகும். மறுபுறம் பாகிஸ்தானுக்கு வரமாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணி தெளிவாக சொல்லி விட்டது. எனவே உலகின் ஏதோ ஒரு நாட்டில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஹாக்கி, ஈட்டி எறிதல் அல்லது கபடி தொடரை நடத்துங்கள். அப்போது இந்தியா – ஆஸ்திரேலியாவை விட இந்தியா – பாகிஸ்தான் தான் பெரியது என்பது தெரியும்”

இதையும் படிங்க: கில்லை விட அவர் குறைஞ்சவாரா? துலீப் கோப்பை கேப்டன்ஷிப் கொடுக்காத கம்பீர் மீது ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

“நீரஜ் மற்றும் அர்ஷத் ஆகியோர் ஒலிம்பிக் தொடரில் மோதிய போது மொத்த உலகமும் தொலைக்காட்சியின் முன்னே இருந்தது. மைதானம் நிரம்பியிருந்தது” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் தனித்துவமான மவுசு இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட மாட்டோம் என்று இந்திய அணி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement