
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்த இலங்கை முன்னிலை வகிக்கிறது. அதன் காரணமாக 3வது போட்டியில் வென்றால் மட்டுமே 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் சந்திக்கும் தோல்வியிலிருந்து தப்ப முடியும் என்ற கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 6, 7வது இடங்களில் களமிறக்கிய முடிவு தோல்விக்கு முக்கிய காரணமானது. ஏனெனில் 2023 உலகக்கோப்பை உட்பட கடந்த காலங்களில் 4, 5வது இடங்களில் களமிறங்கிய அவர்கள் பெரிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகள் பங்காற்றினர். ஆனால் தற்போது சோதனை என்ற பெயரில் அவர்களை கம்பீர் கீழே களமிறக்கியுள்ளார்.
சோதனை வேண்டாம்:
இந்நிலையில் இத்தொடரின் 3வது போட்டியில் தோல்வியை சந்தித்தால் அதற்காக கௌதம் கம்பீர் தான் விமர்சிக்கப்படுவார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார். எனவே மூன்றாவது போட்டியில் கம்பீர் தேவையற்ற சோதனைகளை செய்யக்கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார். வேண்டுமானால் 4வது இடத்தில் ரியான் பராக் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரை கம்பீர் சோதிக்கலாம் என்று பசித் அலி கூறியுள்ளார்.
ஆனால் சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை கம்பீர் 4வது இடத்தில் பரிசோதிக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது இந்தியா சோதனைகளை செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்றது. எனவே இது கௌதம் கம்பீர் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமாகும்”
“வேண்டுமானால் ரியான் பராக் அல்லது ரிசப் ஃபண்ட் ஆகியோருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்கலாம். அடுத்ததாக நீங்கள் வங்கதேசத்துக்கு எதிராக விளையாட உள்ளீர்கள். அவர்கள் வலுவான அணி கிடையாது. ஒருவேளை நீங்கள் இங்கே 3வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்தால் நல்லது. ஆனால் இந்தியா தோற்றால் கௌதம் கம்பீர் மீது மிகப்பெரிய அழுத்தம் உண்டாகும்”
இதையும் படிங்க: ஃபுட் ஒர்க் தெரியாத துபேவுக்கு பதிலாக அவருக்கு சான்ஸ் கொடுக்கலாமே? கம்பீரை விமர்சித்த ஸ்ரீகாந்த்
“இந்தியா அல்லது ரோஹித் மீது அழுத்தம் ஏற்படாது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் தான் விமர்சனங்களை சந்திக்கும். ஏனெனில் ஆசிய கண்டத்தில் வெற்றி நல்லதாகவும் தோல்வி மோசமானதாகவும் பார்க்கப்படும். எனவே இது சோதனை செய்வதற்கான நேரம் அல்ல. அதனால் மூன்றாவது போட்டியில் கம்பீர் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்ப்பேன்” என்று கூறினார்.