பாகிஸ்தானுக்கு எல்லை பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் சென்று விளையாடுவதை இந்திய கிரிக்கெட் அணி தவிர்த்து வருகிறது. அந்த வரிசையில் பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் செல்லாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்நாட்டில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.
அதே போல இம்முறையும் தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஒருவேளை தங்கள் நாட்டுக்கு இந்தியா விளையாட வராமல் போனால் பாகிஸ்தானும் சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்காது என முன்னாள் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்தத் தொடரை 2 நாடுகளில் ஹைப்ரிட் மாடலில் நடத்தினால் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அவர் எச்சரித்துள்ளார்.
1996 மாதிரி:
அதற்காக பாகிஸ்தானை தடை செய்தாலும் பரவாயில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஒருவேளை பாகிஸ்தானுக்கு விளையாட இந்தியா வரவில்லையெனில் அந்த போட்டியை ரத்து செய்து அதற்கான 2 புள்ளிகளை ஐசிசி தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி பசித் அலி கூறியது பின்வருமாறு. “1996 உலகக்கோப்பை உங்களுக்கு நினைவிருக்கிறதா?”
“ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் செல்லாததால் இலங்கைக்கு 2 புள்ளிகள் கொடுக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வெவ்வேறு பிரிவில் போடுமாறு சொல்லிப் பாருங்கள். அதற்கு ஐசிசி மறுப்பு தெரிவிக்கும். ஏனெனில் பணத்தாலேயே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் விளையாடுகின்றன. ஒருவேளை அது ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டு பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லையெனில் எங்களுக்கு 2 புள்ளிகளை கொடுங்கள்”
பாகிஸ்தான் வராது:
“இதற்கு முன்பாக அவ்வாறு நடைபெற்றுள்ளது. எனவே அதை மீண்டும் முயற்சி செய்யுங்கள். பாகிஸ்தான் தங்களுடைய அனைத்து போட்டிகளையும் சொந்த மண்ணிலேயே விளையாட வேண்டும். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தங்களுடைய நாட்டுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டால் பாகிஸ்தான் அதில் பங்கேற்கக் கூடாது. அப்படி நடைபெற்றால் பாகிஸ்தானை ஐசிசி தடை செய்யும் என்று மக்கள் சொல்வார்கள்”
இதையும் படிங்க: 17 வயது மும்பை வீரரை சி.எஸ்.கே கேம்ப்க்கு அழைத்த தல தோனி.. பயிற்சிக்கு வாய்ப்பு – யார் இந்த வீரர்?
“அது போன்ற சூழ்நிலையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் பாகிஸ்தானை தடை செய்ய முயற்சி செய்யுங்கள். அப்படி தடை செய்தால் அனைவரும் தங்களுடைய தூக்கத்தை இழப்பார்கள்” என்று கூறினார். அந்த வகையில் இருநாட்டு தரப்பிலும் இது பற்றி பரபரப்பான விவாதங்கள் பேசப்பட்டு வருகின்றன. இதில் ஐசிசி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



