
சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 5ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற குரூப் டி பிரிவின் லீக் போட்டியில் பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பரோடா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை அடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு துவக்க வீரர்கள் சஸ்வந்த் ராவத் மற்றும் அபிமன்யு சிங் ஆகியோர் சுமாராக பந்து வீசிய சிக்கிம் பவுலர்களை வெளுத்து வாங்கினார்கள். அந்த வகையில் பட்டாசாக விளையாடிய அந்த ஜோடி 5 ஓவரில் 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதில் அபிமன்யு சிங் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 53 (17) ரன்களில் அவுட்டானார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய ராவத் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 43 (16) ரன்களில் பெவிலியன் சென்றா. அடுத்ததாக வந்த பானு பானியா அவர்களை விட சிக்கிம் பவுலர்களை சூறையாடும் வகையில் முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கினார். அவருடன் சேர்ந்து விளையாடிய சிவாலிக் சர்மா தம்முடைய பங்கிற்கு 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 55 (17) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அடுத்ததாக வந்த விஷ்ணு சோலங்கி 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 50 (16) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய பானு பானியா சதத்தை அடித்து 5 பவுண்டரி 15 சிக்சர்களுடன் 134* (51) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் 20 ஓவர்களில் சிக்கிம் அணியை அடித்து துவைத்து நொறுக்கிய பரோடா 349-5 ரன்கள் குவித்தது.
அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற ஜிம்பாப்வே சாதனையை உடைத்த பரோடா புதிய உலக சாதனை படைத்தது. இதற்கு முன் இதே 2024ஆம் ஆண்டு நைரோபியில் நடைபெற்ற காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே 344-4 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் ஒரு டி20 இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற உலக சாதனையும் பரோடா படைத்தது.
இதற்கு முன் அதே காம்பியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே 27 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை. சிக்கிம் அணிக்கு அதிகபட்சமாக பல்சர் தமாங், ரோஷன் குமார் தலா 2 விக்கெட் எடுத்தனர். இறுதியில் 350 ரன்களை துரத்திய சிக்கிம் 20 ஓவரில் 86-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: தரமான ஜஸ்பிரித் பும்ராவை இறங்கி அடிக்க இதான் ஒரே வழி.. ஆஸி அணிக்கு பாண்டிங் அட்வைஸ்
அதனால் 263 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பரோடாவுக்கு அதிகபட்சமாக மகேஷ் பிதியா, அஸ்வின் குமார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் காரணமாக சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற ஆந்திராவின் சாதனையையும் பரோடா உடைத்து புதிய சாதனை படைத்தது.