- Advertisement -
உலக கிரிக்கெட்

வெறும் 106 ரன்ஸ்.. நேபாளை வீழ்த்திய வங்கதேசம்.. புதிய உலக சாதனையுடன் இந்தியாவை எதிர்கொள்ள தகுதி

ஐசிசி 2024 டி20 உலகப் கோப்பையில் ஜூன் 17ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு செயின்ட் வின்சென்ட் நகரில் 37வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் வங்கதேசம் மற்றும் நேபாள் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நேபாள் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் ஆரம்ப முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த வகையில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 19.3 ஓவரில் வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு யாருமே 20 ரன்கள் தாண்டாத நிலையில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17, ரிசத் ஹொசைன் 13, முகமதுல்லா 13 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சாதனை வெற்றி:
மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய நேபாள் சார்பில் சொம்பல் கமி, திபேந்தர் சிங், ரோகித் பவுடேல், சந்திப் லெமீன்னே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 107 ரன்களை துரத்திய நேபாள் மிகவும் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பவுலிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் நேபாளை விட வங்கதேச பவுலர்கள் துல்லியமாக பந்து வீசினார்கள்.

அதற்கு ஈடு கொடுக்க முடியாத நேபாள் அணியும் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.2 ஓவரில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு 4 வீரர்கள் தக் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக கவுசல் மல்லா 27, திபேந்திர சிங் 25 ரன்கள் எடுத்தனர். மறுபுறம் பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்ட வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 4, முஸ்தஃபிசூர் ரகுமான் 3, சாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதன் காரணமாக 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் சூப்பர் 8 தகுதி பெற்றது. மேலும் வெறும் 106 ரன்களை கட்டுப்படுத்தி வென்ற வங்கதேசம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தது.

இதையும் படிங்க: ரணகளத்தில் ஒரு குதூகலம்.. எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்த பாபர் அசாம்.. புதிய உலக சாதனை

இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக நியூயார்க் நகரில் தென்னாப்பிரிக்கா அணி 114 ரன்களை கட்டுப்படுத்தியதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவிடம் 2 – 1 (3) என்ற கணக்கில் டி20 தொடரில் தோல்வியை சந்தித்த வங்கதேசம் இந்த உலகக் கோப்பையில் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் லீக் சுற்றில் போதுமான வெற்றிகளை பெற்ற வங்கதேசம் அடுத்ததாக சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை வரும் ஜூன் 22ஆம் தேதி ஆன்டிகுவா நகரில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -