வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு டாக்காவில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவான் தடுமாறி 7 (17) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
அதனால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்த கேப்டன் ரோகித் சர்மாவை 27 (31) ரன்களிலும் நம்பிக்கை நாயகன் விராட் கோலி 9 (15) ரன்களிலும் ஒரே ஓவரில் காலி செய்த சாகிப் அல் ஹசன் இந்தியாவுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 49/3 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு ராகுலுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்ற ஷ்ரேயஸ் ஐயர் 24 (39) ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தார். அதன் காரணமாக 92/4 என மேலும் தடுமாறிய இந்தியாவை நீண்ட நாட்கள் கழித்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய துணை கேப்டன் கேஎல் ராகுல் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து காப்பாற்ற போராடினார்.
சொதப்பிய இந்தியா:
5வது விக்கட்டுக்கு நிலைத்து நின்ற இந்த ஜோடி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இந்தியாவை காப்பாற்றி விடும் என்று ரசிகர்கள் எண்ணிய போது 19 (43) ரன்களில் சுந்தர் அவுட்டானதும் சபாஸ் அஹமத் 0, ஷார்துல் தாகூர் 2, தீபக் சஹர் 0 என முக்கிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி வந்த வாக்கிலேயே ஒற்றை இலக்க ரன்களில் நடைய கட்டினர். போதாக்குறைக்கு மறுபுறம் தனி ஒருவனை போல் போராடிய ராகுலும் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 73 (70) ரன்களில் அவுட்டானதால் 41.2 ஓவரிலேயே கதை முடிந்த இந்தியா 186 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும் எபோதத் ஹொசைன் 4 விக்கட்டுகளையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து 187 ரன்கள் துரத்திய வங்கதேசத்துக்கு முதல் பந்திலேயே சாண்டோ தீபக் சஹாரிடம் கோல்டன் அவுட்டாக அடுத்து வந்து அனாமல் ஹைக் 14 (29) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். அதனால் 26/2 என தடுமாறிய அந்த அணிக்கு 3வது விக்கெட்டுக்கு முக்கியமான 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் லிட்டன் தாஸை 41 (63) ரன்களில் அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர் அடுத்த சில ஓவர்களில் அவருடன் இணைந்து விளையாடிய சாகிப் அல் ஹசனையும் 29 (38) ரன்களில் காலி செய்தார்.
அடுத்த சில ஓவர்களில் முகமதுல்லா 14, முஷ்பிகர் ரஹீம் 18 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய இந்தியா வெற்றிக்கு போராடியது. அந்தப் போராட்டத்தில் அடுத்து வந்த அஃபிப் ஹசைன் 6, எபோதத் ஹொசைன் 0, மஹ்முட் 0 என டெயில் எண்டர்களை தொல்லை கொடுப்பதற்கு முன்பே காலி செய்த இந்திய பவுலர்கள் சொற்ப ரன்களில் காலி செய்தாலும் கடைசி நேரத்தில் மெஹந்தி ஹாசன் விஸ்வரூபம் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்தார்.
குறிப்பாக 136/9 என சரிந்த வங்கதேசத்தின் கதை முடிந்ததாக கருதப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் நங்கூரமாக நின்று அசத்திய அவர் முக்கிய நேரத்தில் கொடுத்த ஒரு கேட்ச்சை தற்காலிக விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டை விட்டார். அதை பயன்படுத்திய அவர் 4 பவுண்டர் 2 சிக்ஸருடன் 38* (39) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். அவருடன் முஸ்தபிசுர் ரஹ்மான் 10* (11) ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 46 ஓவர்களிலேயே 187/9 ரன்கள் எடுத்த வங்கதேசம் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள அந்த அணி கத்துக்குட்டியாக இருந்தாலும் சொந்த மண்ணில் நாங்கள் புலி தான் என்பதை நிரூபித்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் ஆரம்பம் முதலே அசத்தி 9 விக்கெட்களை எடுத்த இந்திய பவுலர்கள் கடைசி விக்கெட்டை எடுக்க முடியாமல் டெத் ஓவர்களில் மோசமாக செயல்பட்டு கையில் வைத்திருந்த வெற்றியை வங்கதேசத்துக்கு பரிசளித்து இந்திய ரசிகர்களை தலை குனிய வைத்தார்கள்.



