இந்திய அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும் திகழும் விராட் கோலி இதுவரை இந்திய அணிக்காக 91 டெஸ்ட் போட்டிகள், 254 ஒருநாள் போட்டிகள் மற்றும் 90 t20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். அனைத்து வகையான பார்மேட்டிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் விராட்கோலி 70 சதங்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் சச்சினின் 100 சதம் சாதனையை நெருங்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு உள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேவேளையில் விராத் கோலியை போன்றே பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களால் போற்றப்படுபவர் அந்த அணியின் இளம் வீரரான பாபர் அசாம். 26 வயதான அவர் பாகிஸ்தான் அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகள், 80 ஒருநாள் போட்டிகள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் தொடர்ந்து நிலையாக ரன் குவிப்பை வழங்கிவருகிறார்.
இதன் காரணமாக அவ்வப்போது இவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியாவது வழக்கம். இந்நிலையில் அப்படி தன்னை விராத் கோலியுடன் ஒப்பிடுவது குறித்து பேட்டி அளித்துள்ள பாபர் அசாம் கூறுகையில் : உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலி அனைத்து சூழ்நிலைகளிலும், எல்லா நாடுகளிலும் சாதித்திருக்கிறார்.

என்னை அவருடன் ஓப்பிட்டு பேசுகையில் மிகப் பெருமையாக இருக்கிறது. ஏனென்றால் அவர் ஒரு மிகப்பெரிய வீரர். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் ஒரு வீரருடன் மற்றவர்களை ஒப்பிடல் செய்ய கூடாது என்பதே எனது கருத்து என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசுகையில் : என்னை பொருத்தவரை பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். அது மட்டும் தான் என்னுடைய நோக்கமாக இருக்கும்.

அணியின் வெற்றிக்காக நான் பேட்டிங்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தால் எனக்கு அது மகிழ்ச்சியே என்று பாபர் அசாம் கூறினார். மேலும் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன் எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



