- Advertisement -
உலக கிரிக்கெட்

தனியாளா எவ்ளோ தான் பாகிஸ்தான் அணியை தாங்குறது.. தோல்விக்கான காரணத்தை உடைத்த பாபர் அசாம்

ஐசிசி டி20 2024 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சமீப காலங்களாகவே பாபர் அசாம் தலைமையில் சுமாராக விளையாடும் அந்த அணி கடந்த 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இந்த தொடரில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் தோற்றது.

அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 120 ரன்களை அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதனால் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வென்றும் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விகளுக்கு பாபர் அசாம் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

11 பேர் மீதும் தவறு:
அதனால் தற்சமயத்தில் அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் 11 வீரர்களும் அசத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ஆனால் கேப்டன் என்பதால் தாம் மட்டும் ஒற்றை ஆளாக 11 வீரர்களின் இடத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“2023இல் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்த போது இதை நான் செய்யக்கூடாது என்று நினைத்தேன். அதனாலயே அதை நான் விட்டேன். அதன் பின் பாகிஸ்தான் வாரியம் அந்தப் பொறுப்பை என்னிடம் மீண்டும் கொடுத்தார்கள். தற்போது நாடு திரும்பியதும் நாங்கள் இங்கே நடந்த விஷயங்களை பற்றி விவாதிப்போம். ஒருவேளை நான் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன்”

- Advertisement -

“நான் எதன் பின்பும் ஒளிய மாட்டேன். எது நடந்ததோ அதை வெளிப்படையாக சொல்வேன். இருப்பினும் தற்போது அதைப்பற்றி நினைக்கவில்லை. எனவே கேப்டன்ஷிப் என்பது பாகிஸ்தான் வாரியத்தின் முடிவு. அதே சமயம் இந்த தோல்வியை ஒரு வீரரால் பெறவில்லை என்று உங்களிடம் சொல்வேன். அணியாக வெல்லும் நாங்கள் அணியாக தோற்றோம். கேப்டனாக இருப்பதால் நீங்கள் என்னை சொல்கிறீர்கள்”

இதையும் படிங்க: சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி எந்தெந்த அணிகளுடன் மோதயிருக்கிறது? – போட்டிகள் எங்கு நடைபெறுகிறது? – முழு தகவல் இதோ

“ஆனால் நான் அனைத்து வீரர்களின் இடத்திலும் விளையாட முடியாது. அணியில் 11 வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வேலைகள் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் உலகக்கோப்பையில் விளையாட இங்கே வந்தனர். எனவே நாங்கள் அணியாக விளையாடவில்லை. அதை இங்கே ஒப்புக்கொள்கிறோம். சூழ்நிலை மற்றும் எதிர்பார்ப்புக்கு நிகராக நாங்கள் விளையாடவில்லை. தவறு 15 வீரர்கள் மீதும் இருக்கிறது. கேப்டனாக இதற்கான காரணத்தை நான் முடிவை எடுப்பவர்களிடம் சொல்வேன்” என்று கூறினார்.

- Advertisement -