இங்கிலாந்துக்கு மேற்கொண்ட இந்திய அண்டர் 19 கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 2 (5) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. அடுத்ததாக செம்ஸ்போர்ட் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியும் டிராவில் முடிந்தது.
ஜூலை இருபதாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 309 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஏக்னாஸ் சிங் 117, கேப்டன் தாமஸ் ரெவ் 59 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக நமன் புஷ்பக் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய இந்தியா 279 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விஹான் மல்கோத்ரா சதமடித்து 128, கேப்டன் ஆயுஷ் மாத்ரே 80 ரன்கள் எடுத்தார்கள்.
ஆயுஷ் அபாரம்:
அடுத்ததாக 30 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இங்கிலாந்து 324/ ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இறுதியாக 355 ரன்களை துரத்திய இந்தியா 290/6 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 13 பௌண்டரி 8 சிக்ஸருடன் 126 (80) ரன்களை 157.50 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார்.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக பேட்டிங் செய்த அவர் இந்தப் போட்டியில் மிரட்டலாக விளையாடி வெறும் 64 பந்துகளில் சதத்தை அடித்தார். இதன் வாயிலாக அண்டர் 19 டெஸ்ட் போட்டிகளில் வேகமாக சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார். இதற்கு முன் 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இங்கிலாந்தின் ஜார்ஜ் பெல் 88 பந்துகளில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை.
2 உலக சாதனை:
மேலும் இப்போட்டியில் மொத்தமாக அவர் 206 ரன்களை 121.17 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார். இதன் வாயிலாக அண்டர்-19 டெஸ்ட் போட்டியில் மிகவும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் 200+ ரன்கள் என்ற உலக சாதனையையும் ஆயுஷ் படைத்துள்ளார். இதற்கு முன் 2001ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லம் 226 ரன்களை 108.41 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்ததே முந்தைய உலக சாதனை.
இதையும் படிங்க: ரிஷப் பண்ட் காயத்தின் நிலை என்ன? 2வது நாளில் விளையாடுவாரா? இந்தியா வெல்லுமா.. சுதர்சன் பேட்டி
இது போக இப்போட்டியில் மொத்தமாக ஆயுஷ் 9 சிக்ஸர்கள் அடித்தார். இதன் வாயிலாக அண்டர் 19 டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் உடைத்துள்ளார். இதற்கு முன் சௌரப் திவாரி ஒரு போட்டியில் 8 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனை.



