இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி கோப்பை 2025 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் நவம்பர் 28ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற எலைட் குரூப் டி பிரிவின் ஆட்டத்தில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் விளையாடிய விதர்பா 20 ஓவரில் 192/9 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அதர்வா டைட் 64, அமன் மோஜ்டே 61 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக சைராஜ் பட்டேல், சிவம் துபே தலா 3 விக்கட்டுகள் சாய்த்தனர். அடுத்து விளையாடிய மும்பை 17.5 ஓவரில் 194/3 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதிகபட்சமாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 8 பவுண்டரி 8 சிக்ஸரை பறக்க விட்டு சதமடித்து 110* (53) ரன்கள் குவித்து அசத்தினார்.
ரோஹித்தை முந்திய ஆயுஷ்:
அவருடன் சூரியகுமார் யாதவ் 35 (30), சிவம் துபே 39* (19) அடித்து மும்பையை எளிதாக வெற்றி பெற வைத்தார்கள். முன்னதாக மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே சமீப காலங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே மும்பை அணிக்காக அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி முதல் தரப் போட்டிகளில் சதத்தை அடித்துள்ளார்.
அதே போல இந்தியாவில் நடைபெறும் விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் விளையாடி லிஸ்ட் ஏ போட்டிகளிலும் அவர் சதத்தை அடித்துள்ளார். நேற்று டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆயுஷ் சதத்தை அடித்துள்ளார். அந்த வகையில் ரஞ்சிக் கோப்பை (முதல் தரம் டெஸ்ட்), விஜய் ஹசாரே கோப்பை (லிஸ்ட்-ஏ ஒருநாள்), சயீத் முஸ்தாக் அலி கோப்பை (டி20) ஆகிய 3 விதமான உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் 18 வருடம் 135 நாட்களில் சதத்தை அடித்துள்ளார்.
புதிய உலக சாதனை:
இதன் வாயிலாக 3 விதமான உள்ளூர் கிரிக்கெட்டில் சதத்தை அடித்த இளம் வீரர் என்ற புதிய உலக சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஆயுஷ் மாத்ரே: 18 வருடம் 135 நாட்கள்
2. ரோஹித் சர்மா: 19 வருடம் 339 நாட்கள்
3. உன்முக்த் சந்த்: 20 வருடம் 0 நாட்கள்
4. குவிண்டன் டீ காக்: 20 வருடம் 62 நாட்கள்
5. அஹ்மத் சேஷாத்: 20 வருடம் 97 நாட்கள்
இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ
இப்படி தொடர்ச்சியாக உள்ளூரில் அசத்துவதாலேயே தற்போது அவர் இந்திய அண்டர்-19 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான அவர் சதத்தை அடித்து தன்னை நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார். அப்படிப்பட்ட அவர் தற்போது ரோஹித்தின் உலக சாதனையை உடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



