இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் சூரியகுமார் தலைமையில் இந்தியா களமிறங்கியுள்ளது. அதே போல புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் இணைந்து செயல்படத் துவங்கியுள்ளார்.
அவர்களுடைய தலைமையில் ஜூலை 27ஆம் தேதி பல்லக்கேல் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. குறிப்பாக 214 ரன்களை துரத்திய இலங்கை ஒரு கட்டத்தில் 140/1 என்ற வலுவான துவக்கத்தை பெற்றது. ஆனால் அங்கிருந்து அசத்தலாக பந்து வீசிய இந்தியா அடுத்த 5.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை சாய்த்து அபாரமான வெற்றி பெற்றது.
கேப்டன்கள் மாறினாலும்:
அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி தங்களுடைய நீண்ட கால பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் தாம் விளையாடும் கடந்த 10 வருடங்களாக கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மாறினாலும் இந்திய அணி விளையாடும் விதம் மாறியதில்லை என அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தலைமை மாறும் போது சில வீரர்கள் மாறினாலும் இந்திய அணி விளையாடும் விதத்தில் மாற்றம் ஏற்படுவதில்லை என அக்சர் படேல் கூறியுள்ளார். சூரியகுமார் மற்றும் கௌதம் கம்பீர் தலைமையில் விளையாடுவது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் கடந்த 10 வருடங்களாக வித்தியாசமான பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன்”
“ஆனால் எங்கள் அணியில் நிறைய மாறியுள்ளதாக நான் கருதவில்லை. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மாறினாலும் அணி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மீட்டிங்கில் சொல்வார்கள். அணியில் உள்ள 11 – 15 வீரர்கள் எப்போதும் போல தொடர்ந்து விளையாட வேண்டும். அதே சமயம் புதிதாக வருபவர்கள் தாங்கள் விளையாடும் வழி பற்றி எங்களிடம் சொல்வார்கள்”
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் பற்றி கேள்விப்பட்டு இம்ப்ரெஸ் ஆகிட்டேன்.. இதனால் இப்படி அடிக்கிறாரு.. சனாத் ஜெயசூர்யா பாராட்டு
“ஒவ்வொரு பயிற்சியாளர் மற்றும் அவருடைய உள்ளீடுகள் வித்தியாசமானதாக இருக்கும். அவர்கள் வித்தியாசமாக சிந்திப்பதைப் பற்றி எங்களிடம் தொடர்ந்து சொல்வார்கள். இருப்பினும் அணியின் சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படாது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி ஜூலை 28ஆம் தேதி நடைபெறுகிறது. அதிலும் வென்று கோப்பையை கைப்பற்ற இந்தியா தயாராகியுள்ளது.



