
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு அணியைத் தலைமைத் தாங்கும் கேப்டன் இன்றியமையாத வீரராக இருப்பது அவசியமாகிறது. அத்துடன் அணியில் விளையாடும் சக வீரர்களின் திறமையை கேப்டன் தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகிறது. அப்போது தான் சரியான நேரத்தில் தேவையான வீரர்களைப் பயன்படுத்தி அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
அதன் அடிப்படையில் தான் பெரும்பாலான அணியின் கேப்டன்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் சில அணிகளில் கேப்டனாக இருக்க நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அளவுகோலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நேரலை போட்டி அல்லது செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறினால் அதை எதிரணி ரசிகர்கள் கிண்டலடிப்பார்கள்.
அதனால் ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்பதற்காக கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து வீரர்கள் மட்டம் தட்டப்படும் சூழ்நிலை கிரிக்கெட்டில் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இந்நிலையில் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு திறமை வேண்டுமே தவிர, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய வீரர் அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் தொகுப்பாளர் கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு.
“இவர் ஆங்கிலம் பேச மாட்டார் என்பதால் கேப்டன்ஷிப் மெட்டீரியல் கிடையாது என்று மக்கள் பேசுகிறார்கள். உண்மையில் கேப்டன் பேசுவதில் வேலை செய்வதில்லை. தன்னுடைய வீரர்களை பற்றிய பலம், பலவீனங்களை தெரிந்து அவர்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதே கேப்டனின் வேலையாகும்”
“கேப்டனாக இருப்பவர் ஆங்கிலம் நன்றாக பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வது வெளியில் உள்ள மக்களின் சொந்த கருத்தாகும். மக்கள் அப்படி சிந்திப்பதை மாற்றுவது முக்கியமாகும். அத்துடன் ஒருவர் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறாரே, இவர் கேப்டனாக இருக்கத் தகுதியானவர் என்று சிந்திப்பதையும் மக்கள் நிறுத்த வேண்டும். ஒருவர் கேப்டனாக செயல்படுவதற்கு மொழி தடையாக இருக்கக்கூடாது”
இதையும் படிங்க: என் கைல எதுவுமில்லை.. தரமான ஷமி பாய்க்கு இதனால தான் சான்ஸ் கிடைக்கல.. கைவிரித்த கேப்டன் கில்
“ஒரு கேப்டனாக நான் அணியை நட்பாக வைத்திருப்பதையே விரும்புகிறேன். அதே சமயம் யாருக்கும் எளிதாக வாய்ப்பு கிடைக்காது என்பதை உறுதி செய்வேன். அணியின் வெற்றியை உறுதி செய்து விட்டு பின்னர் ஜாலியாக இருக்கலாம் என்பது முக்கியமான வரியாகும். கேப்டனாக எனக்கு அதிக அனுபவமில்லை. அதற்காக நான் மற்றவர்களிடம் உதவி கேட்பேன் என்று அர்த்தமில்லை. அனைவருடைய பரிந்துரைகளை ஏற்று எனது முடிவுகளுக்கு ஆதரவளித்து செயல்படுவேன். நீங்கள் எதைச் சரியாக செய்கிறீர்கள், எதைத் தவறாக செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம்” என்று கூறினார்.