
ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வியை தொடர்ந்து சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கும் இந்தியா செய்த தவறுகளையும் குறைகளையும் நிறையாக்கி மீண்டும் வெற்றிப் பாதையில் நடக்க தயாராகியுள்ளது. விரைவில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் காயத்தால் விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பின் இந்த தொடரில் அவர்கள் களமிறங்குவது பந்துவீச்சு துறையை பலப்படுத்தினாலும் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது பேட்டிங் – பவுலிங் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 உலக கோப்பைக்கு பின் பேட்டிங்கில் மிகப்பெரிய எழுச்சி கண்ட ரவீந்திர ஜடேஜா 3 வகையான கிரிக்கெட்டிலும் உலக அளவில் நம்பர் ஒன் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்து வருகிறார். இருப்பினும் ஐபிஎல் 2022 தொடரில் வழங்கப்பட்ட கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பார்மை இழந்து காயத்தால் வெளியேறிய அவர் உலக கோப்பையில் பங்கேற்க மாட்டார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் அதிலிருந்து விரைவாக குணமடைந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சதமடித்து பார்முக்கு திரும்பிய அவர் அதன்பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்தலாக செயல்பட்டார்.
ஜடேஜாவின் பின்னடைவு:
அந்த வகையில் நல்ல பார்மில் இருந்த அவர் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில் லீக் சுற்றின் முடிவில் புத்துணர்ச்சி அடைவதற்காக நீச்சல் குளத்தில் அலைச்சறுக்கு செய்யும் போது தேவையின்றி தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார். அதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட்டுள்ள தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் ஆகியோரில் விளையாடப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் கடந்த பிப்ரவரியில் அறிமுகமாகி இதுவரை கிடைத்த வாய்ப்புகளில் நல்ல சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் தீபக் ஹூடா இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவமில்லாதவராக உள்ளார். மறுபுறம் மற்றொரு சுழல்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அக்சர் படேலும் இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடியதில்லை என்றாலும் ஹூடாவை விட நல்ல அனுபவம் கொண்டவர்.
கவலை வேண்டாம்:
அதனால் ஆஸ்திரேலிய தொடர் உட்பட உலக கோப்பையில் ஜடேஜாவின் இடத்தில் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரின் ஒரு போட்டியில் தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுத்து நல்ல பார்மில் இருக்கும் அவர் ஜடேஜாவை போல் அனுபவம் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் ரோகித் சர்மா இது பற்றி முதல் டி20 போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு.
“எங்களுக்கு ஆல் ரவுண்டர் தேவைப்படுகிறது. ஏனெனில் ரவீந்திர ஜடேஜா வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவாகும். இருப்பினும் அக்ஷர் பட்டேல் எப்போதும் எங்களுடைய திட்டத்தில் இருக்கிறார். அதுபோக ஏற்கனவே ஜடேஜா – அக்சர் பட்டேல் ஆகியோருக்கு இடையே தான் போட்டி நிகழும். ஏனெனில் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவர்கள். தற்போது ஜடேஜா இல்லாத காரணத்தால் அவருடைய இடத்தில் அவருடைய வேலையை அக்சர் பட்டேல் எங்களுக்கு சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம்”
“மேலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரு போட்டியில் அவர் தனி ஒருவனாக வென்று கொடுத்தார். அத்துடன் அவர் போட்டியின் 3 பாகத்திலும் பந்து வீசக்கூடியவர். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் பந்து வீசும் திறமை பெற்றுள்ள அவர் மிடில் ஓவரிலும் பந்து வீசுவார். மேலும் பெரிய மைதானங்களில் தேவைப்பட்டால் கடைசி கட்ட ஓவர்களிலும் அவரால் பந்து வீச முடியும்” என்று கூறினார். இந்த வருடம் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அக்ஷர் பட்டேல் 8 விக்கெட்டுகளை 8.32 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.