
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவரிடம் ஏராளமான அனுபவம் இருக்கிறது. அத்துடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் என அவருடைய ஆதரவில் வளர்ந்த பல வீரர்கள் நாளடைவில் ஜாம்பவான்களாக உருவெடுத்தனர்.
அதனால் நிறைய வீரர்கள் தங்களுடைய ஆட்டத்தை மெருகேற்ற தோனியிடம் ஆலோசனைகளை கேட்டு அதன் படி நடப்பது வழக்கமாகும். இந்நிலையில் ஆரம்பக் காலங்களில் தாமும் தடுமாற்றமாக விளையாடியதாக இந்திய வீரர் அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார். அப்போது துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
துரதிஷ்டவசமாக அந்தத் தொடரில் சுமாராக விளையாடிய இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் அத்தொடரில் தோனி தமக்கு வழங்கிய ஆலோசனைகள் தான் நாளடைவில் தம்முடைய பேட்டிங்கை மெருகேற்றி சிறப்பாக விளையாட காரணம் என்று அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அக்சர் பட்டேல் பேசியது பின்வருமாறு.
“பேட்ஸ்மேனாக என்னுடைய கேரியரை துவங்கிய நான் என்சிஏ சென்ற போது முழு நேர ஸ்பின்னராக மாறினேன். என்னுடைய ஆரம்பக் காலங்களில் என்னால் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதனால் என் மேலே நான் சந்தேகப்படத் துவங்கினேன். அந்த காலங்களில் சுமாராக விளையாடியதால் 2018ல் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நான் என்னுடைய பேட்டிங்கை முன்னேற்ற கடினமாக உழைக்க தொடங்கினேன்”
“பின்னர் எம்.எஸ். தோனி 2021 டி20 உலகக் கோப்பை அணிக்கு ஆலோசகராக வந்தார். என்னுடைய ஆரம்பக் காலங்களில் தோனி தலைமையில் விளையாடினேன். அப்போது “என்னால் பேட்ஸ்மேனாக சாதிக்க முடியும் என்று நம்பாமல், அனைத்து நேரமும் சிறப்பாக விளையாட வேண்டுமென உனக்கு நீயே அழுத்தத்தை போட்டுக் கொள்கிறாய்” என்று தோனி என்னிடம் தெரிவித்திருந்தார். தோனி பாய் தெரிவித்த அந்த வார்த்தைகளை மெதுவாக செயல்படுத்தத் துவங்கிய நான் என்னுடைய தன்னம்பிக்கையை மீண்டும் பெற்றேன்”
இதையும் படிங்க: 2026 டி20 உ.கோ இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.. என் தலைவிதி மறுபடியும் அங்கே கொண்டுப்போகும்.. கில் பேட்டி
“இப்போதெல்லாம் இந்திய அணியில் என்னை மேலே களமிறக்குகிறார்கள் என்றால் அவர்கள் அங்கே என்னால் அசத்த முடியும் என்று நம்புகிறார்கள் என்பது அர்த்தமாகும். களத்திற்கு செல்லும் போது என்னை நான் மிதவை பேட்ஸ்மேனாக கருதுவதில்லை. களத்திற்கு சென்று கண்மூடித்தனமாக அடி அல்லது குறிப்பிட்ட பந்துகளை வீசு என்று இந்திய அணி என்னிடம் சொல்லி அனுப்புவதில்லை. எனக்கு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும் அதே வேலை வழங்கப்படுகிறது” என்று கூறினார்.