
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை அந்நாட்டில் அவர் 8 போட்டிகளில் 44 விக்கெட்களை 18.80 என்ற சராசரியிலும் 2.46 என்ற மிரள வைக்கும் ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளார்.
அதிலும் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்த அவர் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற உதவினார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ரன்கள் அடிப்படையில் தங்களுடைய பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனையும் படைத்தது. அதனால் பும்ரா சிறந்த ஆல் ஃபார்மட் பவுலராக அசத்துவதாக ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் ஜாம்பவான் வாசிம் அக்ரமுக்கு பின் ஆஸ்திரேலியர்கள் ஜஸ்ப்ரித் பும்ராவை மட்டுமே பார்த்து பயப்படுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி பாராட்டியுள்ளார். அடிலெய்ட் நகரில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் 4 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா சவாலை கொடுத்து வருகிறார்.
அது பற்றி பசித் அலி பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா பும்ரா மீது கவனம் செலுத்துகிறார்கள். ஆஸ்திரேலிய அணி அவருக்கு எதிராக வாய்ப்புகளை எடுப்பதில்லை. வாசிம் அக்ரமுக்கு பின் ஆஸ்திரேலியர்கள் பார்த்து பயப்படும் ஒரே பவுலராக பும்ராவை நான் பார்க்கிறேன். வாசிமுக்கு எதிராக அவர்கள் ரன்கள் அடிக்க நினைக்க மாட்டார்கள்”
“எதிர்ப்புறம் பந்து வீசும் மற்ற பவுலர்களுக்கு எதிராகத்தான் ரன்கள் அடிக்க முயற்சிப்பார்கள். அதே போன்ற திறமையை கொண்ட பும்ரா இந்தப் போட்டியில் இந்தியாவை மீண்டும் கொண்டு வரலாம். ஆனால் இந்த போட்டியில் முதல் நாள் இரவில் சுமாராக பேட்டிங் செய்த காரணத்தால் இந்தியா வெற்றியை துரத்தி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் ஸ்கொயர் பவுண்டரி தூரம் குறைவாகவும் நேரான பவுண்டரி தூரம் அதிகமாகவும் இருக்கும்”
இதையும் படிங்க: 12 ஸ்ட்ரைட் யார்கர்.. சச்சினே யார்ன்னு கேட்டாரு.. 2015இல் பும்ராவை அறிமுகப்படுத்தியது பற்றி ஜான் ரைட்
“அதனால் ஸ்கொயர் திசையில் அடிக்க முயற்சித்த ஜெய்ஸ்வால், சுப்மன் கில் போன்ற இந்திய வீரர்கள் அவுட்டானார்கள். ஆனால் அந்த பந்துகளை அவர்கள் நேராக அடித்திருக்க முயற்சித்திருக்க வேண்டும்” என்று கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.