- Advertisement -
உலக கிரிக்கெட்

ஆஸியா இது? இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்ப முடிந்தவரை போராடிய ஆஸ்திரேலியா.. மோசமான உலக சாதனை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. அதனால் ஸ்காட்லாந்து அணி லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. மறுபுறம் நேற்றைய போட்டியில் நமிபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது.

அதன் காரணமாக ரன்ரேட்டில் ஸ்காட்லாந்தை நூலிலையில் பின்னுக்குத் தள்ளிய இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் ஸ்காட்லாந்தை எப்படியாவது ஆஸ்திரேலியா தோற்கடித்தாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. அது போன்ற சூழ்நிலையில் தங்களுடைய பரம எதிரியான இங்கிலாந்தை லீக் சுற்றுடன் வீட்டுக்கு அனுப்பவதற்கான வேலையை ஸ்காட்லாந்து போட்டியில் செய்வோம் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் கூறினார்.

- Advertisement -

மோசமான சாதனை:
கடைசியில் ஹேசல்வுட் நகைச்சுவைக்காக அப்படி சொன்னதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி பட் கமின்ஸ் சமாளித்தார். இருப்பினும் அந்தப் போட்டியில் இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியது என்றே சொல்லலாம். ஏனெனில் அப்போட்டியில் ஸ்காட்லாந்து வீரர்கள் கொடுத்த 6 கேட்ச்களை ஆஸ்திரேலியா ஃபீல்டர்கள் தவற விட்டனர்.

பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் என்றாலே கடினமான கேட்ச்களை கூட அசால்டாக பிடிப்பதில் வல்லவர்களாக அறியப்படுகிறார்கள். அப்படிப்பட்ட அவர்கள் இந்தப் போட்டியில் 6 கேட்ச்களை தவற விட்டதை பார்த்த ரசிகர்கள் இது ஆஸ்திரேலியர்கள் தானா? என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக கேட்ச்சுகளை தவற விட்ட அணி என்ற மோசமான உலக சாதனையையும் ஆஸ்திரேலியா படைத்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன் 2009 மற்றும் 2010 டி20 உலகக் கோப்பைகளில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தான் தலா 5 கேட்ச்களை விட்டதே முந்தைய சாதனையாகும். மறுபுறம் அதை பயன்படுத்தி 180 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் அடித்த அசோசியேட் அணி என்ற அற்புதமான சாதனை படைத்தது.

இதையும் படிங்க: விராட் கோலி மாதிரி வருவாருன்னு எதிர்பாத்தேன்.. ஆனா பாபர் அசாம் அங்க மட்டும் ஏமாத்துறாரு.. அப்ரிடி வருத்தம்

இருப்பினும் பந்து வீச்சில் முக்கிய நேரத்தில் சொதப்பிய அந்த அணி கடைசி ஓவரின் 4வது பந்தில் போராடி வெற்றியை நழுவ விட்டது. மொத்தத்தில் இதைப் பார்க்கும் ரசிகர்கள் இங்கிலாந்தை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியதாக கிண்டலடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -