24 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவிடம் பல்ப் வாங்கி சொந்த மண்ணில் மண்ணை – கவ்விய பாகிஸ்தான்

Pak
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டுக்கு 24 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வந்தது. பல வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா விளையாடுவதால் இந்தத் தொடருக்காக உலகம் முழுவதிலும் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு எகிறியது.

pak vs aus

- Advertisement -

அந்த வேளையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ரிச்சி பென்னட் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதர் ஆகியோரை பெருமைப்படுத்தும் வண்ணம் இந்த தொடர் முதல் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அனைத்து டெஸ்ட் தொடர்களும் பென்னட் – காதர் ட்ராபி என அழைக்கப்படும் என்று இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்தன. இதை அடுத்து கடந்த மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடந்த இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் தார் ரோடு போல அமைக்கப்பட்டிருந்த பிட்ச் காரணமாக டிராவில் முடிந்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலக அளவில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தது.

முக்கியமான 3-வது போட்டி:
அதன் காரணமாக யாருமே தொடரில் முன்னிலை வகிக்காததால் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் 21-ஆம் தேதியன்று லாகூரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து தனது முதல் இன்னிங்சில் 391 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 91 ரன்களும் கேமரூன் கிரீன் 79 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அசத்திய நசீம் ஷா மற்றும் ஷாஹின் அப்ரிடி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

khawaja

மிரட்டிய ஆஸ்திரேலியா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அந்த அணியின் அசாத் சபிக் 81 ரன்களும் அசார் அலி 78 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 68 ரன்களும் எடுத்ததால் 248/3 என நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அப்போது விசுவரூபம் எடுத்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பட் கமின்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பாகிஸ்தானை சிதைத்தனர் என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் அடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்களை அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்த அவர்களின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத பாகிஸ்தான் வெறும் 268 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய கேப்டன் பட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

starc

இதனால் 123 முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் 227/3 ரன்கள் எடுத்திருந்த போது மிகவும் தைரியமாக டிக்ளேர் செய்தது. ஏனெனில் இதே போன்ற நிலைமையில் இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் 506 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் கடைசி நாளில் அபாரமாக பேட்டிங் செய்து கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி பின் ட்ரா செய்தது. அப்படிப்பட்ட நிலையில் அதைவிட குறைவான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியாவுக்கு 4-வது நாளின் முடிவில் 73/0 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அச்சுறுத்தலை கொடுத்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா சாதனை வெற்றி:
அந்த வேளையில் கடைசி நாளில் 10 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற த்ரில் இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. மறுபுறம் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளர் நேதன் லையன் மிகவும் தொல்லை கொடுத்தார். குறிப்பாக அசாத் ஷபிக் 27, இமாம்-உல்-ஹக் 70, அசார் அலி 17, பாபர் அசாம் 55 என ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இடைஞ்சலாக இருந்த பாகிஸ்தானின் டாப் 4 வீரர்களை நேதன் லயன் அவுட் செய்து போட்டியை தன் அணியின் பக்கம் திருப்பினார்.

அவருடன் கைகோர்த்த கேப்டன் பட் கம்மின்ஸ் கடைசிகட்ட பரபரப்பான நேரத்தில் பாகிஸ்தான் வீரர்களை செய்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் சொந்த மண்ணில் மண்ணை கவ்வி பரிதாப தோல்வி அடைந்தது. மறுபுறம் 15 நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 13 நாட்கள் தார் ரோடு போல அமைக்கப்பட்டிருந்த பிட்ச் காரணமாக வெற்றி யாருக்குமே கிடைக்காது என கருதப்பட்ட நிலையில் கடைசி 2 நாட்களில் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 115 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முதல் இன்னிங்சில் 91 ரன்கள் 2வது இன்னிங்சில் 104* ரன்கள் எடுத்து வித்திட்ட உஸ்மான் கவாஜா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். இதன் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா வரலாற்றின் முதல் பென்னட் – காதர் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் நடந்த இந்த தொடரில் பரிதாப தோல்வி அடைந்த பாகிஸ்தானை பார்த்த அந்நாட்டு ரசிகர்கள் 24 வருடங்களுக்களாக இதற்காகவா காத்திருந்தோம் என்பது போல் சோகத்துடன் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

PAK

அத்துடன் பாகிஸ்தான் மண்ணில் 9 தொடர்களில் பங்கேற்ற ஆஸ்திரேலியா 3-வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற 3-வது கேப்டன் என்ற பெருமையை ரிச்சி பென்னட் (2 – 0 என 1959/60) மற்றும் மார்க் டய்லர் (1 – 0 என 1998/99) ஆகியோருக்கு பின் பட் கமின்ஸ் பெற்றுள்ளார். மேலும் ஆசிய மண்ணில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா 11 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் வென்று நிம்மதி அடைந்துள்ளது.

Advertisement