வெறும் 1 விக்கெட்.. சிறிய தவறால் நொறுங்கிய பாகிஸ்தான்.. இந்தியாவுடன் மோத ஆஸி தகுதி பெற்றது எப்படி?

AUS vs PAK u19
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை 2024 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் பிப்ரவரி எட்டாம் தேதி பெனோனி நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48.5 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அசான் அவாய்ஸ் 52, அரபாத் அரசாத் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

- Advertisement -

நொறுங்கிய பாகிஸ்தான்:
அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய பாகிஸ்தானுக்கு பதில் சொல்ல முடியாத சாம் கொன்ஸ்டஸ் 14 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் ஹூக் வெயிப்ஜென் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த ஹர்ஜஸ் சிங் 5 ரன்களில் அவுட்டாக அதற்கடுத்ததாக வந்த ரியான் ஹிக்ஸ் கோல்டன் டக் அவுட்டானார்.

அதனால் 59/4 என தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு மறுபுறம் துவக்க வீரர் ஹரி டிக்சன் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினார். அந்த வகையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரை சதமடித்து 50 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். அதே போல அவருடன் சேர்ந்து எதிர்புறம் விளையாடிய டாம் கேம்பல் முக்கியமான நேரத்தில் 49 ரன்கள் குவித்து அலி ராசா பந்தில் அவுட்டானார்.

- Advertisement -

அந்த நிலைமையில் ரஃப் மெக்மிலன் நிதானமாக விளையாடிய போதும் எதிர்ப்புறம் டாம்ஸ் கிரேக்கர் 3, மகில் பியர்ட்மேன் 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி 24 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் அப்போது மெக்மிலன் – காலும் விட்லர் போராடியதால் வெற்றியை நெருங்கிய கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பாகிஸ்தான் 50 ஓவரை வீசி முடிக்கவில்லை.

அதனால் விதிமுறைப்படி கடைசி ஓவரில் உள்வட்டத்திற்கு வெளியே நடுவர்கள் ஒரு பாகிஸ்தான் ஃபீல்டரை குறைத்தார்கள். அந்த நிலையில் மெக்மிலன் ஜீசன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே இன்சைட் எட்ஜ் வாயிலாக பவுண்டரி அடித்து ஆஸ்திரேலியாவை வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க: அந்த பையன் 15 வயசுலயே இங்கிலாந்துல அடிக்கிறத பாத்தேன்.. இளம் வீரரை பாராட்டிய திலிப் வெங்சர்கார்

கடைசி விக்கெட்டுக்கு 17 ரன்கள் அடித்த மெக்மிலன் 19*, விட்லர் 2* ரன்கள் எடுத்ததால் தப்பிய ஆஸ்திரேலியா பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவதற்கு தகுதி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்கத் தவறி கடுமையாக போராடிய பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அலி ராசா 4 விக்கெட்டுகள் எடுத்தும் ஒரு ஃபீல்டர் குறைக்கப்பட்ட பின்னடைவால் பரிதாப தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதனால் அந்த அணி வீரர்கள் மைதானத்திலேயே மனமுடைந்தனர்.

Advertisement