Ashes 2023 : வெறியுடன் போராடிய பென் ஸ்டோக்ஸ், மீண்டும் மிரட்டிய ஆஸி – சொந்த மண்ணில் இங்கிலாந்து அவமானத்தை சந்தித்தது எப்படி

ENG vs AUS Ben Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் அதிரடியாக விளையாடி தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் சொதப்பிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அந்த நிலைமையில் ஜூன் 28ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 110 ரன்கள் எடுக்க டேவிட் வார்னர் 66, டிராவிஸ் ஹெட் 77, மார்னஸ் லபுஸ்ஷேன் 47 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் டாங் மற்றும் ஓலி ராபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஜாக் கிராவ்லி 48, பென் டூக்கெட் 98, ஓலி போப் 42 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் நல்ல ரன் குவிப்பால் 188/1 என்ற சிறப்பான துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

சொந்த மண்ணில் அவமானம்:
ஆனால் அதன் பின் ஆஸ்திரேலியா விரித்த ஷார்ட் பிட்ச் வலையில் அதிரடியாக ஸ்டைலுக்காக விளையாடுகிறோம் என்று சுமாரான ஷாட்டுகளை அடித்த ஜோ ரூட் 10, ஹரி ப்ரூக் 50, பென் ஸ்டோக்ஸ் 17, ஜானி பேர்ஸ்ட்டோ 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்தி இங்கிலாந்தை 325 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 89 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் 279 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அதிகபட்சமாக ஸ்டுவர்ட் ப்ராட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 371 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 3, ஓலி போப் 3, ஜோ ரூட் 18, ஹரி ப்ரூக் 4 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்ததே அந்த அணியின் தோல்வியை பாதி உறுதி செய்தது. இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து நங்கூரமாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் பென் டூக்கெட் 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போதிலும் 83 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலைமையில் வந்த ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாகி சென்றாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த கேப்டன் ஸ்டோக்ஸ் நேரம் செல்ல செல்ல நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் சதமடித்து வெறித்தனமாக வெற்றிக்கு போராடினார்.

அவருக்கு ஸ்டுவர்ட் ப்ராட் கை கொடுத்ததால் இங்கிலாந்து வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் முடிந்தளவுக்கு போராடி 155 ரன்களில் அவுட்டானார். அத்துடன் கதையும் முடிந்தது போல் டெயில் எண்டர்களை விரைவில் அவுட்டாக்கி இங்கிலாந்தை 327 ரன்களுக்கு சுருட்டி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து உங்களையும் அடிப்போம் என்று ஆஸ்திரேலியாவை ஆரம்பத்திலேயே எச்சரித்தது.

இதையும் படிங்க:எங்க டீம் இன்னைக்கு தோத்து போயி நிக்குதுனா அதுக்கு காரணம் இதுதான் – வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் வேதனை

ஆனால் தரமான பவுலிங்கை கொண்ட எங்களிடம் உங்களது ஆட்டம் செல்லுபடியாகாது என்று பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா அதை செயலிலும் செய்து காட்டி 2 – 0* (5) என இத்தொடரில் வலுவான முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. மறுபுறம் தரமான பவுலிங்கை கொண்ட ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட்ட இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையற்ற அதிரடி அணுகுமுறையுடன் விளையாடி மீண்டும் மண்ணில் தோல்வியை சந்தித்து அவமானத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

Advertisement