- Advertisement -
இந்திய கிரிக்கெட்

துலீப் கோப்பை 2025: ஹாட்ரிக் உட்பட 4 பந்தில் 4 விக்கெட்ஸ்.. கபில் தேவ் சாதனையை சமன் செய்த நபி

இந்தியாவில் புகழ்பெற்ற 2025 துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் முதல் காலிறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் வடக்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. அதில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வடக்கு மண்டலம் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 405 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கன்ஹாயா வாதவன் 76, ஆயுஷ் படோனி 73, நிஷாந்த் சிந்து 47, ஆகிப் நபி 44 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். கிழக்கு மண்டலத்துக்கு அதிகபட்சமாக மனிசி 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

4 பந்தில் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்ஸ்:

அடுத்து விளையாடிய கிழக்கு மண்டலம் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் சிங் 69, உட்கர்ஸ் சிங் 38 ரன்கள் எடுத்த நிலையில் வடக்கு மண்டலத்துக்கு அதிகபட்சமாக ஆகிப் நபி 5 விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக 53வது ஓவரை வீசிய 28 வயது பவுலர் ஆகிப் நபி 4வது பந்தில் நங்கூரமாக விளையாடி சவாலைக் கொடுத்த விராட் சிங்கை 69 ரன்னில் கிளீன் போல்ட்டாக்கினார்.

அதோடு நிற்காத அவர் அதற்கடுத்த 2 பந்துகளில் மனிசி, முக்தர் ஹுசைன் ஆகியோரை அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். அத்துடன் 55வது ஓவரை வீச வந்த அவர் முதல் பந்திலேயே மறுபுறம் நங்கூரத்தை போட முயற்சித்த சுராஜை 10 ரன்னில் போல்ட்டாக்கினார். அந்த வகையில் ஆகிப் நபி 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

கபில் தேவ் சாதனை:

இதன் வாயிலாக துலீப் கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற கபில் தேவ், சைரஜ் பஹத்துலே ஆகியோருடைய சாதனையை நபி சமன் செய்துள்ளார். இதற்கு முன் 1978இல் மேற்கு மண்டலத்துக்கு எதிராக வடக்கு மண்டலத்தின் கபில் தேவ், 2001இல் வடக்கு மண்டலத்துக்கு எதிராக மேற்கு மண்டலத்தின் சைராஜ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.

இதையும் படிங்க: ஒரே ஓவரில் 38 ரன்ஸ்.. 12 பந்தில் 11 சிக்ஸ்.. 26 பந்தில் 80.. ரெய்னா போல கதகளி ஆடிய கேரள வீரர்

அத்துடன் முதல் தர கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற எஸ்எஸ் ஷைனி (1988/89), முகமது முதாஹிர் (2018/19), குல்வந்த் கெஜ்ரோலியா (2023/24) சாதனையையும் நபி சமன் செய்தார். அடுத்து விளையாடும் மேற்கு மண்டலம் 3வது நாள் முடிவில் 388/2 ரன்கள் எடுத்து 563 ரன்களை முன்னிலையாகப் பெற்றுள்ளது. யாஷ் துள் 133 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் கேப்டன் அன்கீத் குமார் 168*, ஆயுஷ் படோனி 56* ரன்களுடன் உள்ளார்கள்.

- Advertisement -