
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் உலகின் அனைத்து முன்னணி கிரிக்கெட் அணிகளும் மும்முரமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஐபிஎல் 2022 தொடர் முடிந்ததும் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா அதன்பின் அயர்லாந்து, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது வெஸ்ட் இண்டீஸில் விளையாடி வருகிறது. மேலும் இந்த வருடம் ஆரம்பத்திலேயே சொந்த மண்ணில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராகவும் பங்கேற்ற இந்தியா இதுவரை எந்த ஒரு டி20 தொடரிலும் தோல்வியடையாமல் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.
முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா அடுத்ததாக டி20 போட்டிகள் என பார்த்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் பங்கேற்க உள்ளது.
துபாயில் ஆசிய கோப்பை:
இந்த வருடத்துக்கான ஆசிய கோப்பை முதலில் இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியால் வெடித்துள்ள மக்கள் புரட்சியால் இந்த தொடரை நடத்த முடியாது என்று அந்நாட்டு வாரியம் கடைசி நேரத்தில் கை விரித்தது. ஆனால் ஏற்கனவே கடந்த 2020இல் நடைபெறவேண்டிய ஆசிய கோப்பை கரோனாவால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்முறை இலங்கை இவ்வாறு செய்யும் என்பதை ஏற்கனவே உணர்ந்த ஆசிய கவுன்சில் வங்கதேசம் அல்லது துபாயில் நடக்கும் பிளான் பி திட்டத்தை வைத்திருந்தது.
அந்த நிலைமையில் கடைசியாக கடந்த 2018இல் துபாயில் ஆசிய கோப்பை வெற்றிகரமாக நடைபெற்றதால் இம்முறையும் அங்கு நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. கடந்த முறை 50 ஓவர் தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பையில் வங்கதேசத்தை தோற்கடித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வென்றது. இருப்பினும் இம்முறை டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் 20 ஓவர் தொடராக நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
வெளியான அட்டவணை:
இந்நிலையில் துபாயில் நடைபெறும் 15-ஆவது ஆசிய கோப்பைக்கான முழு அட்டவணையை அதன் தலைவர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளது பின்வருமாறு. “ஆசிய டாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் தொடருக்கான காத்திருப்பு முடிந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்த 15-ஆவது ஆசிய கோப்பை டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறுகிறது” என்று அறிவித்துள்ளார்.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 2 மைதானங்களில் நடைபெறும் நிலையில் செப்டம்பர் 11இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டி துபாயில் நடைபெற உள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் குவாலிபயர் சுற்றில் வெல்லும் அணியும் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஒரு குரூப் பிரிவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் 6 லீக் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறவுள்ளன. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பின்னர் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பாகிஸ்தானுடன் மோதல்:
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. மேலும் இந்தியா தனது 2-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் வரும் ஆகஸ்ட் 31இல் குவாலிபயர் சுற்றில் வென்று வரும் அணியுடன் மோத உள்ளது. இதே துபாயில் கடைசியாக கடந்த டி20 உலக கோப்பையில் வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு இம்முறை பதிலடி கொடுத்து இந்தியா பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.